பக்கம்:நித்திலவல்லி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

51


இதைக் கேட்டு அவன் சிரித்தான். ஆனால், இந்தச் சிரிப்பில் அவள் கூறியதை அவன் நம்பாமல் ஏளனம் செய்யும் தொனிதான் நிறைந்திருந்தது.

“உண்மையா, பிரமையா என்பதை நான் எப்படிச் சோதனை செய்ய வேண்டுமோ அப்படிச் சோதனை செய்து கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த வாளை ஓங்கி அந்தப்பூங்குவியலில் அழுத்திச் சொருக முயன்றான் அவன். அதைக் கண்டு செல்வப் பூங்கோதையும், வண்டியை ஒட்டுகிறவனும் பதறிப் போனார்கள். செல்வப் பூங்கோதை குறுக்கே பாய்ந்து அவன் பூக்குவியலில் வாளைச் செருக முடியாதபடி தடுக்கவும் செய்தாள். உடனே தாங்க முடியாத சினத்தோடு “எல்லாம் பிரமை என்றால் நீங்கள் ஏன் பதற வேண்டும்? வாளைச் சொருகித் துழாவிப் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? என்று இரைந்தான் அவன்.

“தெய்வ காரியத்துக்காகக் கொண்டு போகும் பூக்களைப் பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றி வாளால் தீண்டுகிறீர்களே என்றுதான் நாங்கள் பதற்றமும் பயமும் அடைகிறோம். முதலில் நீங்கள் வாளால் சுட்டிக் காட்டியபோதும் இப்போதும் நாங்கள் பயப்படுவது எல்லாம் தெய்வக் குற்றம் நேர்ந்து விடக் கூடாதே என்பதற்காகத் தானே ஒழிய வேறு எதற்காகவும் இல்லை” என்று அவள் சமயோசிதமாகக் கூறிய சொற்கள் அவனை வழிக்குக் கொண்டு வந்தன. ‘பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றிவாள்’ என்று அந்த அழகிய இளம் பெண்ணின் இதழ்களிற் பிறந்த இனிய சொற்களால் தன் தோள் வலிமையும், வாள் வலிமையும் புகழப்பட்டிருந்ததால் அவன் சற்றே கிறங்கியிருந்தான். புகழில் மயங்கி இளகியிருந்தான் அவன்.

ஒரு பெண்ணிடம் இல்லாத வீரமும் வலிமையும் ஓர் ஆண்மகனிடம் இருந்தாலும் அந்த வீரத்தையும் ஆண்மையையும் ஒரு பெண் வந்து தன் கிள்ளை மொழிகளால் புகழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/52&oldid=715210" இலிருந்து மீள்விக்கப்பட்டது