பக்கம்:நித்திலவல்லி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. வெள்ளியம்பலம்

யானைப் பாகன் அந்துவன் சுட்டிக் காட்டிய திசையில் எதிர்ப் பக்கத்திலிருந்து களப்பிரர்கள் நாலைந்து பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். நந்தவனப் பகுதிகளைக் கடந்து கோவிலின் யானைக் கொட்டாரம் இருந்த பகுதியை நோக்கி அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, இது நிகழ்ந்தது. எதிரே நேராக இலக்கு வைத்து வருவது போல் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தக் களப்பிரர்களை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு கணம் தயங்கினான் இளையநம்பி.

“நம்முடைய கோவில்களில்கூட இவர்கள் நுழைந்து விட்டார்களா?” -என்று அடக்க முடியாத கோபத்தோடு அந்துவனின் காதருகே இளையநம்பி முணுமுணுத்தபோது-

“ஒற்றர்களுக்கும், பிறரைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்களுக்கும் எங்கேதான் வேலை இல்லை?” என்று மெல்லிய குரலில் அந்துவனிடம் இருந்து இளையநம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

அவர்கள் இருவர் மனத்திலும் ஒரேவிதமான உபாயம் அந்த வேளையில் தற்செயலாகத் தோன்றி வெளிப்பட்டது. அந்த நாலைந்து களப்பிரர்கள் தங்களை நெருங்குமுன் இவர்களே சிறிது விரைந்து முந்திக் கொண்டு, அவர்கள் எதிரே போய்ப் பாலிமொழியில் மிகவும் சுபாவமாகத் தெரிகின்ற உற்சாகத்தோடு, அவர்களை நலம் விசாரித்து வாழ்த்தினர். பதிலுக்கு அவர்களும் அதே முகமன் உரைகளைக் கூறவே, ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே மேலே நடந்து விட்டனர். அந்துவனும் இளைய நம்பியும் சிறிது தொலைவு சென்றதும் அந்துவனிடம் இளைய நம்பி கூறினான்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/58&oldid=945245" இலிருந்து மீள்விக்கப்பட்டது