பக்கம்:நித்திலவல்லி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

நித்திலவல்லி / முதல் பாகம்



“முரடர்களின் மிகப் பெரிய சந்தேகங்களைக் கூடச் சுலபமாக நீக்கி விடலாம். ஆனால் பலவீனமானவர்களின் சிறிய சந்தேகங்களைக் கடுமையாக முயன்றாலும் கூடப் போக்க முடியாது! நல்லவேளையாகக் களப்பிரர்களில் பெரும்பாலோர் முரடர்கள்.”

“முரடர்கள் என்றாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் என் முகத்தில் அல்லவா விழித்திருக்கிறீர்கள்? இருந்த வளமுடைய பெருமாளே இந்தக் கடுமையான களப்பிரர் ஆட்சியில் ஆபத்தில்லாமல் இருக்கக் காரணமாக நாள் தவறாமல் எந்த முகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த முகத்தில் நீங்களும் விழித்திருக்கிறீர்கள்!”

“அதாவது நாள் தவறாமல் உன் முகத்தில் முதலில் விழிப்பதனால் தான் எல்லாம் வல்ல பெருமாளுக்கே இவ்வளவு புகழ் என்கிறாய் இல்லையா?”

“அதில் சந்தேகம் என்ன?”

“பெரிய வம்புக்காரனாக இருப்பாய் போலிருக்கிறதே!... சிரித்துச் சிரித்து வாய் புண்ணாகி விடச் செய்கிறாய் நீ!”

“இந்த நற்சான்று அடியேன் முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து கூடக் கிடைத்திருக்கிறது ஐயா! நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர் வெற்றுச் சிரிப்பையும், நகைச்சுவையையும் அதிகம் விரும்பாதவர் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். காரியங்களைச் சாதிக்காத வார்த்தைகளும், எதிராளியை வெற்றி கொள்ள முடியாத புன்முறுவலும் ஓர் அரச தந்திரியின் வாயிதழ்களிலிருந்து வெளியேறி நஷ்டப்படக் கூடாது என்று அடிக்கடி கூறுகிறவர் அவர். அவரையே சமயா சமயங்களில் என்னுடைய பேச்சுகளால் சிரிக்க வைத்திருக்கிறேன் நான்.”

“'அந்துவா! கடவுள் இன்னும் ஒன்பது பேர் முகத்தில் வைத்திருக்க வேண்டிய சிரிப்பையும் சேர்த்துக் கைத்தவறுதலாகவோ, மறதியாகவோ உன் ஒருவன் முகத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/59&oldid=945248" இலிருந்து மீள்விக்கப்பட்டது