பக்கம்:நித்திலவல்லி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நித்திலவல்லி / முதல் பாகம்



கொள்ளலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்; அந்தத் தோட்டத்தில் உள்ள கடம்ப மரங்களில் மிகப் பெரிய அடிமரத்தை உடையது எதுவோ, அதன் அருகே நீங்கள் காத்திருக்க வேண்டும். அவன் உங்களைச் சந்திக்க நடுச்சாமம் வரை கூட நேரம் ஆகலாம்” என்றான் அந்துவன்.

இருந்த வளமுடையாரை வழிபட்ட பின் இருளில் கூட்டத்தோடு கூட்டமாக மதுரை நகரின் வீதிகளில் அலைந்து வெள்ளியம்பல மண்டபத்திற்கு இளையநம்பி போய்ச் சேரும் போது அதிக நேரம் ஆகியிருந்தாலும், இன்னும் மண்டபத்தில் கலகலப்புக் குறையவில்லை.

பல மொழி பேசும் பல நாட்டு யாத்திரிகர்களும், வணிகர்களும், புலவர்களும், திருவிழாப் பார்க்க வந்தவர்களுமாக எண்ணற்றோர் தங்கியிருந்த கடல் போற் பரந்த அந்த அம்பலத்தை, எல்லாப் பகுதியும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் தோட்டத்துக்குள் நுழையும்போதே நள்ளிரவாகி விட்டது. கடம்ப மரங்களில் மிகப் பெரிய மரத்தைத் தேடி, அவன் அதனருகிற் போய் நிற்கவும் அங்கு இருளில் நன்றாக முகம் தெரியாத மற்றொருவன் வந்து சேர்ந்தான். ஒரு கணம் தயங்கியபின் புதியவனை நோக்கி இளைய நம்பி ‘கயல்’ என்று கூறினான். ஆனால் வந்த புதியவனிடம் இருந்து பதிலுக்கு அந்த நல்லடையாளச் சொல் ஒலிக்கவில்லை. உடனே இளையநம்பியின் நெஞ்சம் விரைந்து துடித்தது.

அருகில் வந்தவனோ தள்ளாடினான். அவன் சுயபுத்தியோடு பேசும் நிலையில் இல்லை என்பதை மிகச் சிறு கணங்களிலேயே இளையநம்பி தெரிந்து கொண்டான். நாட்பட்டுப் புளித்த தேறலை அருந்திவிட்டுத் தள்ளாடி அரற்றி அலையும் அந்தக் களப்பிரன், தான் சந்திக்க வேண்டிய மனிதனாக இருக்க முடியாது என்பதையும் அவன் உடனே புரிந்துகொண்டான். தன்னை அங்கே அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வரப் போகிற நண்பனுக்கு இடையூறாகக் குடித்து விட்டு அலையும் இந்தக் களிமகன் நடுவே நிற்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/61&oldid=945249" இலிருந்து மீள்விக்கப்பட்டது