பக்கம்:நித்திலவல்லி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நித்திலவல்லி / முதல் பாகம்



தன் வலிமையல்லாத, எதனால் தன்னை அலங்கரித்தாலும், அதை மெல்ல மெல்லச் சுட்டெரிக்கக் கூடியது. பூக்களாலும், பொன்னாலும் நீ எதை வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால் நெருப்பை மட்டும் பூவாலோ, பொன்னாலோ புனைய முடியாது. பூவைக் கருக்கி விட்டுப் பொன்னை உருக்கிவிட்டுத் தன் பிரகாசமே பிரகாசமாய் மேலும் வென்று எரிவது தழல். சத்தியமும் அப்படித்தான். அப்படி ஒரு சத்திய பலம் நம்மிடம் இருக்கிற வரை, பாண்டிய குலம் வெல்லும் என்பதைப் பற்றி உனக்குக் கவலை இருக்கக் கூடாது.”

இந்த மனோ திடத்தையும் நம்பிக்கையையும் கேட்ட வியப்பில் ஒன்றும் மறுமொழி சொல்லத் தோன்றாமல் இருந்தான் அந்தப் புதியவன். சத்தியத்தின் மேலிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையாளனைக் கண்டதும், ‘நம் எதிரே, மனம் மொழி மெய்களால் வணங்கத்தக்க இணையற்ற வீரனும் தீரனுமான ஒருவன் நிற்கிறான்'- என்ற எண்ணத்தில் அந்தப் புதியவனுக்கு மெய் சிலிர்த்தது. இளையநம்பி அந்தப் புதியவனை வலத் தோளில் தட்டிக் கொடுத்தபடி மேலும் கூறலானான்:

“தைரியமாயிரு! இப்படி யார் நாகரிகத்தையோ காட்டும் பொய்க்கோல வாழ்வு போய் மங்கலப்பாண்டிவள நாட்டு மறத்தமிழனாக, இதே மதுரை மாநகர வீதிகளில் மீண்டும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும். நுட்பத்திலும், சிந்தனை வலிமையிலும் இணையற்ற ஒர் இராஜரிஷி நமக்காக அல்லும் பகலும் திட்டமிட்டு வருகிறார் என்பதை நினைவிற் கொள்...”

“தங்கள் நல்வாழ்த்து விரைவில் மெய்யாக வேண்டும் என்றே நானும் ஆசைப்படுகிறேன். இப்போது நாம் போகலாம். எதுவும் தெரியாத காரிருளில், நெடுந்துரம் தங்களை நடத்தி அழைத்துச் செல்ல நேர்வதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.”

“இருளைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை அப்பனே! இன்று பாண்டி நாட்டில் இரவில் மட்டுமல்ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/67&oldid=945252" இலிருந்து மீள்விக்கப்பட்டது