பக்கம்:நித்திலவல்லி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நித்திலவல்லி / முதல் பாகம்



‘அது கை இல்லை, தாமரைப்பூ’ என்று அவள் புனைந்து கூறியபோது, ‘இல்லை! அது கையேதான்’ என்று மறுக்கத் தயங்கி, அந்தப் பூதபயங்கரப் படை வீரனே, அது தாமரைப் பூதான் என்று நம்பி விடும் அளவுக்குப் பூவோடு அது ஒப்பிடப் பொருத்தமாயிருந்தது. அந்தக் கை மலர் அவள் நினைவில் பசுமையாய் வந்து தங்கியிருந்தது இப்போது.

“ஒரு வீரனின் கை பூப் போல் மென்மையாக இருக்கக் கூடாதுதான்! வாளும், வேலும் பற்றிச் சுழற்றிக் காய்த்துப் போயிருக்க வேண்டிய கை இது. தாமரைப் பூப் போல் மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும், சிவப்பாகவும் ஒரு கவிஞனின் கையைப் போல் இருக்கும்படி, இந்தக் கை வாளும் வேலும் ஏந்த முடியாமல் செய்துவிட்ட களப்பிரர்கள் மேல் திரும்பியது அவள் ஆத்திரம் எல்லாம். இளையநம்பியின் பூம்பட்டுக் கையை எண்ணியபோது பழைய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல போர்களில் வெற்றி வாகை சூடிய பேரரசன் ஒருவன், ஒரு கவிஞரின் வலது கரத்தைப் பற்றித் தழுவி அவரைப் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லைப் போல் காய்ந்துத் தழும்பேறிய தன் கையும், பூப்போல் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடிய புலவர் கையும் இணைந்தபோது-

“ஐயா, புலவரே! உங்கள் கைமட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று ஓர் அதிசயத்தைக் கண்டவன் போல் வியந்து வினவினான் அந்த அரசன்.

“இதில் வியப்பென்ன அரசே! நீ அன்போடு அளிக்கும் உணவை உண்டு வருந்தும் தொழிலைத் தவிர வேறு உழைப்பின் துயரங்கள் படியாத கைகள் இவை. இவை மென்மையாக இராமல் வேறு எப்படி இருக்கமுடியும்? உன் கைகள் வன்மையாக இருப்பதற்கும், இவை மென்மையாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். துயரங்களை எல்லாம் உன் கைகளே தாங்கிக் கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்” -என்று அந்த அரசனுக்கு அந்தப் புலவர் மறுமொழி கூறினாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/71&oldid=945255" இலிருந்து மீள்விக்கப்பட்டது