பக்கம்:நித்திலவல்லி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நித்திலவல்லி / முதல் பாகம்



போயாயிற்று’ -என்று சைகை மூலம் அவர்களுக்குத் தெரிவித்தான். சுற்றி மற்றவர்கள் இருந்ததால், அந்துவன் தன்னைச் சூழ இருந்தவர்களுக்குச் சந்தேகம் எழாதபடி பெரியகாராளர் மகளோடும் மனைவியோடும் நெருங்கிச் சென்று விரிவாக உரையாடுவதை அப்போது தவிர்க்க வேண்டியதாயிற்று.

வண்டிகள் பூட்டப்பெற்றுப் புறப்பட்டபோது, “அம்மா அந்துவன் செய்த குறிப்பைக் கவனித்தாயா?... அவர் இங்கிருந்து யாதொரு கெடுதலும் இன்றி அடுத்த இடத்துக்குப் போய்விட்டாராம்” -என்று ஆர்வம் பொங்கத் தாயிடம் கூறினாள், செல்வப்பூங்கோதை.

“ஆம்! கவனித்தேன். இனி அந்தத் திருக்கானப் பேர் பிள்ளையாண்டானைப் பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை. அந்துவனும் இங்குள்ள மற்றவர்களும் உயிரைக் கொடுத்தாவது அந்தப் பிள்ளையைப் பாதுகாப்பார்கள். இப்போது நாம் நேரே ஊர் திரும்புகிறோமா அல்லது ஆலவாய்க்குள் போய் இறைவனையும் வழிபட்டு விட்டுப் போகலாமா?”

என்று அன்னையிடமிருந்து வினாவாக மறுமொழி கிடைத்தபோது ஆலவாய்ப்பகுதிக்குப் போகலாம் என்றே செல்வப் பூங்கோதையும் இணங்கினாள்.

வண்டிகள் ஆலவாய்ப் பகுதிக்குப் போகுமுன், வெள்ளியம்பலப் பகுதியையும், திருநடுவூரையும் கடந்து சென்றபோது, செல்வப் பூங்கோதையின் கண்கள் கூட்டம் நிறைந்த கூடற் கோநகர வீதிகளில் மனிதர்களோடு மனிதர்களாகத் தனக்கு விருப்பமான அந்த முகம் எங்காவது தென்படாதா என்பதையே தேடிக்கொண்டிருந்தன. யாத்திரீகர்களும், பிற தேசத்தவரும் அதிகமாகத் தங்கக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியில் அங்கங்கே திரிந்து கொண்டிருந்த பூதபயங்கரப்படை வீரர்களைக் கண்ட வேளைகளில் எல்லாம், “ஐயோ! இந்தக் கொலை பாதகர்களிடம் சிக்கிவிடாமல் அவர் தப்ப வேண்டுமே"-என்று அவள் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/73&oldid=945257" இலிருந்து மீள்விக்கப்பட்டது