பக்கம்:நித்திலவல்லி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. கருங்கல்லும் மலர்மாலையும்

மோகூர் ஊரெல்லையை அவர்கள் அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஊர் அடங்கியிருந்ததால் வண்டிகளை இழுத்துச் சென்ற காளைகளின் கழுத்துமணி ஓசை கூட இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டு கணீர் கணீரென்று தனியாக ஒலித்தது. மூன்று வண்டிகளுக்கான ஆறு காளைகளின் கழுத்து மணிகளும் ஒலிக்க விரைந்து ஊர் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வண்டிகள் ஊர் எல்லையில் சாலையருகே யாரோ இருவர் ஒதுங்கி நிற்பதைக்கண்டு, அடையாளம் புரிந்து உடனே நிறுத்தப்பட்டன. நிற்பவரைக் கண்டு மணி ஒலிகள் அடங்கி வண்டிகள் அடுத்தடுத்து நின்ற விதமே தனியானதொரு பணிவையும் அடக்கத்தையும் காட்டின. யார் முன்னிலையில் உலகியலான சிறிய ஓசைகள் அடங்கிவிடுமோ அப்படி ஒரு கர்மயோகி வானையும் மண்ணையும் அளப்பது போன்ற உயரத்துடன் தன் அருகே பவ்வியமாகப் பணிந்து நிற்கும் காராளரோடு அங்கே நின்றிருந்தார்.

இருளையும் நிசப்தத்தையும் வென்று ஒலிக்கும் மணிகளின் கிண்கிணி நாதத்தோடு விரைந்து வந்த அவ்வண்டிகள் உடனே அடங்கி நின்ற விதம் எதிரே தோன்றியவரின் தோற்றத்துக்குக் கட்டுப்பட்டு அடங்கி விட்டாற் போலவே இருந்தது.

இரவில் காராளரோடு உலாவ வந்த மதுராபதிவித்தகர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஒரு பனைத் தொலைவு பின்னால் எந்நேரமும் அவரை நிழல்போல் உடனிருந்துகாக்கும் ஆபத்துதவிகள் இருவரும் கூடத் தென்பட்டனர். முதல் வண்டியிலிருந்த செல்வப் பூங்கோதையும், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/76&oldid=715259" இலிருந்து மீள்விக்கப்பட்டது