பக்கம்:நித்திலவல்லி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நித்திலவல்லி / முதல் பாகம்



அன்னையும் கீழே இறங்கிப் பெரியவரை வணங்கினர். காராளரின் மனைவிக்கு மதுராபதி வித்தகரிடம் அளவற்ற பயம். அவரை எதிரே பார்த்து விட்டால், அவளுக்குப் பேச வராது. ஏதாவது தவறாகப் பேசி விடுவோமோ என்ற பயத்திலேயே அவள், அவர் முன்னிலையில் பேசமாட்டாள். செல்வப் பூங்கோதைக்கும் ஓரளவு அந்த அச்சம் உண்டு என்றாலும், தந்தை அனுப்பியும், தானாகவும் அவள் அவரைக் காண ஆல மரத்தடிக்கு அடிக்கடி செல்ல நேரிடுவது வழக்கம் என்பதால் அவருடன் ஓரளவு உரையாட முடியும். அப்படி உரையாடும் வேளைகளில் எல்லாம், செங்குத்தான மலை ஒன்றில் ஏற முயன்று இயலாமல், அச்சத்தோடு பாதியிலேயே கீழே இறங்கி விடும் ஒரு குழந்தையின் நிலையில், தன்னுடைய சொற்களுக்குப் பிடி கிடைக்காமல் தடுமாறும் ஓர் அனுபவத்தையே அவள் அடைந்திருக்கிறாள். மலர்களைப் போல் நளினமாகவும், பயபக்தியோடும் அவர் முன்னிலையில் அவள் தூவிய சொற்களை உணர்ச்சியோ, கிளர்ச்சியோ அடையாமல் கல்லைப் போல் தாங்கியிருந்திருக்கிறார் அவர். தன்னிடம் பேசுகிற எதிராளி வெற்றுச் சொற்களை நிறைய அடுக்கலாகாது என்று அவரே வாய் திறந்து கட்டளை இடுவதில்லை, ஆனால் பேசுகிறவன் தான் பேசும் போது, எதிரே தெரியும் அவருடைய கண்களையும், முகத்தையும் பார்த்தாலே பேசுவதற்கென்று திரட்டிய பல சொற்கள் கழன்று விழுந்து விடும். இது தவிர்க்க முடியாதது என்பதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். இப்போது அவள் தந்தை அவளைக் கேட்டார்.

“நடந்தவற்றைச் சொல்லம்மா!... ஏன் தயங்குகிறாய்?”

பெரியவரும் வலது கரத்தை மேல் நோக்கி அசைத்துச் ‘சொல்லேன்’ என்பது போல் குறித்து உணர்த்தினர். ‘சொல்’ என வார்த்தையால் கேட்காமல், அவர் அப்படிக் குறிப்புக் காட்டியதே அவளை ஓரளவு தாழ்வு உணர்ச்சியடையச் செய்தது. மொழியால் பேச நீயும் நானும் ஓர் எல்லையில் இல்லை என்பதுபோல் அவளை மருட்டியது அந்தக் குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/77&oldid=945357" இலிருந்து மீள்விக்கப்பட்டது