பக்கம்:நித்திலவல்லி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

79



பூத பயங்கரப் படையினர் யாரோ ஒரு மனிதரை ஒற்றர் என்று ஐயப்பட்டு சங்கிலியால் பிணித்து இழுத்துச் சென்றதைச் சொல்லும் போது, அதைக் கூறும் தன் வார்த்தைகளில் பதற்றத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்போது மட்டும் மதுராபதி வித்தகரின் குரல் தன் தந்தையை நோக்கி “இப்படி நம்மால் அன்பு செய்யப்படுகிறவர்களின் சுகதுக்கங்களைப் பல வேளைகளில் நாமே கற்பித்துக் கொள்கிறோம்! ஆனால், நாம் கற்பிக்கின்ற துக்கங்களின் படி துக்கங்களும் வருவதில்லை. நாம் கற்பிக்கின்ற சுகங்களின் படி சுகங்களும் வருவதில்லை --காராளரே?” என்று கூறியதைக் கேட்டாள் அவள், ‘நாம் கற்பித்தபடி துக்கங்கள் வருவதில்லை’ என்று அவர் கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘நாம் கற்பித்தபடி சுகங்களும் வருவதில்லை’ என்பதை அவர் ஏன் கூறினார் என்று அந்த வார்த்தைகளை மட்டும் ஏற்க முடியாமல் அவள் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது,

“ஆனால் நாம் விரும்புகிறபடியே நம் சுகங்கள் அமையவேண்டும் என்றும், நாம் விரும்புகிறபடியே நம் துக்கங்கள் விலகிப் போய்விட வேண்டும் என்றும் இளம் பருவத்தில் ஓர் ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு", என்று பெரியவரே மேலும் பேசிய போது, தன் மனத்தைப் படித்து விட்டு அவர் மறுமொழி கூறினாற் போல் துணுக்குற்றாள் அவள். கூறுகின்ற சொற்களைக் கேட்டு விட்டு ‘மறுமொழி சொல்கிறவர்கள் நிறைந்துள்ள உலகில் நினைக்கின்ற சொற்களுக்கும் தீர்மானம் செய்தாற் போல் மறுமொழி கூறுகின்ற அந்தச் சதுரப்பாட்டை வியந்து நின்றாள் அவள். முதல் வாக்கியத்தை அவர் பேசிய சுகதுக்கங்களைப் பற்றி எதற்காக இப்போது இப்படி ஒரு தத்துவம் சொல்லுகிறார் என்று அவள் சிந்தித்தாள். அவளுக்குள்ளே இப்படி ஒரு சிந்தனையை உண்டாக்குவதற்காகவே முன் வாக்கியத்தைச் சொல்லியிருந்தவர் போல், அந்தச் சிந்தனையுடனேயே தனது இரண்டாவது வாக்கியத்தின் மூலம் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/80&oldid=945360" இலிருந்து மீள்விக்கப்பட்டது