பக்கம்:நித்திலவல்லி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நித்திலவல்லி / முதல் பாகம்



மீண்டும் அந்த யானை மலைக் கருங்கல்லின் மேல் படர்ந்து உதிர்ந்த முல்லைப் பூக்கள்தான் நினைவு வந்தன அவளுக்கு.

அதற்குமேல் அவளிடமும் அவள் அன்னையிடமும் கேட்டறிய வேறெதுவுமில்லை என்பது போல், வலது கையை மேலே போக வேண்டிய சாலையை நோக்கி அசைத்து, விடை கொடுப்பது போல் குறிப்பு உணர்த்தினார் அவர். அன்னையோடு வண்டியில் போய் ஏறியபோது,

“பெண்கள் உணர்ச்சி மயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களை விடச் சுகதுக்கங்களைப் பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும், கழித்துவிட்டுப் பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும்” என்று தொலைவில் பெரியவர் தன் தந்தையிடம் கூறிக் கொண்டு செல்வதை அவளும் கேட்க முடிந்தது. நீண்ட நேரம் இந்தச் சொற்களையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இந்த வாக்கியத்தில் பதங்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பலவீனமான சிந்தனையால் உடைத்துப் பொருள் கண்டுபிடிக்க முடியாத இராஜ தந்திரப் பூட்டுகள் நிறைந்திருப்பது போல் தோன்றி அவளைப் பயமுறுத்தின... நீண்ட நேரம் இந்த வாக்கியத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

இரவு நெடு நேரங் கழித்து பெரியவரை ஆலமரத்திற் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய தன் தந்தையிடம் “இந்த வாக்கியத்துக்குப் பொருள் என்ன? ஏன் பெரியவர் அவரிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்?” என்று வினாவியதோடு தன் மனத்தில் தோன்றிய யானை மலை முல்லைக் கொடி கருங்கல்லில் உதிர்க்கும் பூக்களின் உவமையையும் அவள் மெல்லச் சிரித்தபடி கூறினாள். அப்போது அவர் அவளை மறுத்தார்.

“மகளே! அவரைப் பற்றி அப்படி நினைக்காதே. வருங்காலப் பாண்டிய நாட்டின் பல நூறு தலைமுறைகளை இன்றைய சிந்தனையில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் செயல் வேள்வியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/81&oldid=945361" இலிருந்து மீள்விக்கப்பட்டது