பக்கம்:நித்திலவல்லி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நித்திலவல்லி / முதல் பாகம்



“உறுதிதான்! உங்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் எப்படி இந்த வழியைப் பற்றிய இரகசியம் களப்பிரர்களுக்குத் தெரிய முடியாதோ அப்படியே அந்த கணிகை மாளிகையிலிருந்தும் தெரிய முடியாது. பாண்டிய குலத்துக்காகச் சர்வபரித்தியாகம் செய்யும் நெஞ்சுறுதி படைத்தவர்கள் அந்த மாளிகையில் இருக்கிறார்கள் என்பது பெரிவருக்கு மிக நன்றாகத் தெரியும். அவருடைய நம்பிக்கை பெரும்பாலும் தவறுவதில்லை.”

“கணிகையர்களில் நெஞ்சுறுதி படைத்தவர்களும் இருப்பார்கள் என்று நான் இன்றுதான் முதல்முதலாக உன்னிடத்திலிருந்து கேள்விப்படுகிறேன் அழகன் பெருமாள்!”

“அது ஒன்றை மட்டுமில்லை ஐயா! பல புதிய விஷயங்களையே நீங்கள் இன்றுதான் முதன் முதலாக என்னிடம் கேள்வீப்படுகிறீர்கள்...”

“இப்போது என்ன சொல்கிறாய் நீ?”

“தவறாகவோ, மதிப்புக் குறைவாகவோ எதுவும் சொல்லி விடவில்லை. கோநகருக்கு நீங்கள் புதியவர், பலவற்றை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் கூறினேன்.”

கணிகையர்களின் இயல்பைப் பற்றித் தான் பொதுவாகக் கூறிய ஒரு கருத்து, அழகன் பெருமாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை இளைய நம்பியினால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மிக வலிமையான காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. என்றாவது ஒரு நாள் நிலவறைப் பாதையின் மூன்றாவது முனையாகிய அந்தக் கணிகையர் மாளிகையைப் பற்றித் தானே அறிந்தாலொழிய, அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது என்றும் தோன்றியது அவனுக்கு.

உப வனத்து முனையை அடைவதற்கு இன்னும் நெடுந்துாரம் செல்ல வேண்டியிருப்பதாக அழகன் பெருமாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/85&oldid=945365" இலிருந்து மீள்விக்கப்பட்டது