பக்கம்:நித்திலவல்லி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நித்திலவல்லி / முதல் பாகம்



கவனம் அதிகம் குவியாத இடம் எது? இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் களப்பிரர் ஆட்சி அபாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று அவர்களே உணர்ந்திருக்கிறார்களா?”

“திருவாலவாய்ப் பகுதியையும் இருந்தவளப் பகுதியையும் பற்றிக் களப்பிரர்கள் அதிகம் கவலைப்படவில்லை. நடுவூர் ஏற்கெனவே அவர்களுடைய கடுமையான பாதுகாப்பில்தான் இருக்கிறது. புறநகரில் வையை ஆற்றை ஒட்டிய பகுதிகளையும், அகநகரில் அயலவர்களும், யாத்திரீகர்களும், தேசாந்திரிகளும் பழகக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியையும்தான் மிகவும் சந்தேகக் கண்களோடு பார்த்து வருகிறார்கள் அவர்கள்.”

“அப்படியானால் சிறிதும் இலக்குப் பிழையாமல்தான், அவர்களுடைய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அகநகருக்குள் ஊடுருவுவதற்குரிய ஒரே வழி வெள்ளியம்பலத் தோட்டத்தின் பின்புறம் மதிலோரமாக உள்ள பாழ் மண்டபத்தில் இருக்கிறது. வெளியேறுவதற்குரிய ஒரே வழி ஆற்றங்கரையில் உப வனத்தில் இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளைத்தான் களப்பிரர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்றால், நாம் முதல் வேலையாக அவர்கள் சந்தேகத்தைத் திசை திருப்புவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அழகன் பெருமாள்!”

“கணிகையர் வீதியின் வழியே மூன்றாவதாக ஒரு வாயில் இருப்பது எவ்வளவிற்கு இன்றியமையாதது என்பதை இப்போதாவது நீங்கள் உணர முடிகிறதா ஐயா? வெள்ளியம்பலத்து முனைக்கும் உப வனத்து முனைக்கும் அபாயங்கள் வந்தாலும் நாம் பயன்படுத்த ஒரு மூன்றாவது முனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.”

அழகன் பெருமாள் மீண்டும் அந்தக் கணிகையர் வீதி நிலவறை வழி பற்றி இப்படிக் கூறிய போது இளையநம்பி ஓரிரு கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் வாளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/87&oldid=945362" இலிருந்து மீள்விக்கப்பட்டது