பக்கம்:நித்திலவல்லி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நித்திலவல்லி / முதல் பாகம்



“நிதானமாக நினைத்துப் பார்த்தால், காரண காரியங்களின் நீங்கிய பிரமாணங்கள் இருக்க முடியாது என்பதை நீயும் புரிந்துகொள்ள வேண்டும்.”

“போதும் ஐயா! நமக்குள் வீண் வாக்குவாதம் வேண்டியதில்லை. நிலவறை வழியில் நடந்து வரும் போது, எந்த விஷயமாக உங்களுக்கும் எனக்கும் பிணக்கு நேர்ந்ததோ, அதில் என் நிலையில் எவ்வளவு நியாயமும், தெளிவும் உறுதியும் இருக்கிறது என்பதை நீங்களே ஒரு நாள் தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.”

இதைக் கேட்டு இளையநம்பி புன்முறுவல் பூத்தான். அழகன் பெருமாள் மாறன் தன் நிலையில் உறுதியோடும், பிடிவாதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதோடு இன்னோர் உண்மையையும் அழகன் பெருமாளைப் பற்றி இளையநம்பி புதிதாக இப்போது அறிய முடிந்திருந்தது. அவன் உப வனக் காப்பாளனாக இருப்பது மதுராபதி வித்தகரின் வாக்குக்குக் கட்டுப்பட்டே அன்றி உண்மையில் அவன் ஓரளவு விஷய ஞானமுள்ளவனாகத் தோன்றினான். மான்கள், மயில்கள் என்ற வார்த்தைகளைப் பொருள் வேறுபட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்திப் பேசிய மறுகணமே, ‘திருக்கானப்பேரில் பேச்சு வழக்கில் கூட ஆகுபெயரையும், அன்மொழித் தொகையையும் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது’ என்று தயங்காமல் அவன் மறுமொழி கூறியது இளையநம்பிக்கு வியப்பூட்டியது.

மாற்றான் தொடுக்கும் அம்புகளுக்குப் பதிலாக அதை விட வேகமான அம்புகளை ஆயத்தமாக வைத்திருந்து, உடனே காலப் பிரமாணம் தவறாமல். தொடுக்கும் போர் வல்லாளர்களைப் போல் உரையாடலில் விடை தருபவர்களிடம் உடனே பதில் தரும் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யும். அழகன் பெருமாளிடம் அந்த விஷய ஞானத் தெளிவு இருந்தது. மதுராபதி வித்தகர் பயிற்சி அளித்து உருவாக்கிய ஒவ்வோர் ஆளும் ஒரு சீரான வினைத் திறமை உடையவர்களாக இருப்பதையும் அவன் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/91&oldid=945354" இலிருந்து மீள்விக்கப்பட்டது