பக்கம்:நித்திலவல்லி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

நித்திலவல்லி / முதல் பாகம்



வாழ்க்கையின் தளர்ச்சி தெரியும் சற்றே சோர்ந்த கண் பார்வையும், மூப்பும் உடைய ஒருவன் எதிரே நிறையப் பூக்களைக் குவித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தான்.

திரண்டு கொழுத்த தோள்களையும், பாயும் வேங்கை போல் ஒளி உமிழும் கூர்மையான விழிகளையும், நீண்ட நாசியையும் உடைய ஒருவன் இழுத்து நிறுத்தி வில்லில் நாண் இணைத்துக் கட்டிக் கொண்டிருந்தான்.

கிளிகளும் பிற பறவைகளும் எழுப்பும் ஒலிகளோடு மண்டபத்தின் பின்புறம் வையை பாயும் ஒலியும், தொலைவிலே திருமருத முன் துறையின் ஆரவாரங்களும் அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருந்தன.

சந்தித்த சில கணங்கள் இரு தரப்பிலும் மெளனமே நீடித்தது. முதலில் அழகன் பெருமாள்தான் அந்த மெளனத்தைக் கலைத்து இளையநம்பியை அவர்களுக்கு இன்னாரென்று சொல்லி விளக்கினான்.

“பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசி பெற்று இங்கே புறப்பட்டு வந்திருக்கிறார் இவர்! திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரர் இளைய நம்பியை இப்போது நாம் நம்மிடையே காண்கிறோம்” என்று அழகன் பெருமாள் மாறன் கூறி விளக்கியதும் அங்கிருந்த ஐவரும் மெல்ல ஒவ்வொருவராக எழுந்து நின்று வணங்கினர். , அந்த ஐவரும் அழகன் பெருமாளின் வாயிலிருந்து ‘பெரியவர் மதுராபதி வித்தகர்’ என்ற சொற்கள் தொடங்கியதுமே, அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெல்ல எழத் தொடங்கி விட்டதை, இளைய நம்பி கவனித்திருந்தான். சிறிது நேரத்திலேயே இளையநம்பி அவர்களோடு நெருக்கமாக உறவாடத் தொடங்கி விட்டான். யாழுக்கு நரம்பு கட்டிக் கொண்டிருந்தவனுக்கும் உதவி செய்து அதை விரைவாகச் செம்மைப்படுத்தித் தானே இசைத்தும் காண்பித்தான். வில்லுக்கு நாண் கட்டிக் கொண்டிருந்தவனுடைய கையிலிருந்து அதை வாங்கி வலது காலின் ஒரு நுனியைக் கொடுத்து மேற்புறம் பலங்கொண்ட மட்டும் அழுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/93&oldid=945356" இலிருந்து மீள்விக்கப்பட்டது