பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறு புயல் 55

வருவார். நானும் அவர் பள்ளி விழாக்களுக்குத் தவறாமல் போய் வருவதுண்டு.

அக்காலத்தில் இலால்குடி கழக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிப் பெரும் புகழ்பெற்ற திருவேங்கடம் பிள்ளை என்பவர் மாற்றலாகி முசிறிக் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி யேற்றார். இவரையும் சந்தித்து நண்பராக்கிக் கொண்டேன். முசிறிப் பிள்ளையவர்களும் நாமக்கல் பிள்ளையவர்களும் பள்ளி வளர்ச்சியில் நான் அவர்கள் துணையையும் ஆலோசனையையும் நாடியபொழுது ஒல்லும் வகைகளி லெல்லாம் மனமுவந்து உதவியதை என் வாழ்நாள் உள்ளவரையும் மறக்க முடியாது. அதுபவம் மிக்க இந்த நான்கு பெரியார்களும் கவசம்போல் நின்று நான் பள்ளி வளர்ச்சிச் செயலில் இறங்கும்போது எனக்குப் பெரும் பாதுகாப்பாக இருந்து வந்தனர்.

இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்தில் சி. இரகுநாதன் (மாவட்டக் கல்வி அதிகாரி) எங்கோ செல்கின்றவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். ஆய்வுக்காக வரவில்லை. இது திடீர் வருகை. புதுப்பள்ளியாதலால் தாளாளரைப் பார்க்க வேண்டுமென்றார். தாளாளர் சின்ன துரையிடம் இட்டுச் சென்றேன். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் ஒதுங்கிக் கொண்டு பங்களாவின் தோட்டத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து மணித் துளிகள் பேசிக் கொண்டிருந்ததாக நினைவு. மரியாதைக்காக ஏதாவது பானம் வழங்கியிருக்க வேண்டும். அதை நான் கவனிக்கவில்லை. பொதுவாகப் பள்ளி வளர்ச்சிபற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் பேச்சின் இறுதியில் ஒரு சொட்டு வைத்துவிட்டு வந்தார் என்பதைப் பின்னர் அறிய முடிந்தது மறுநாள் தாளாளர் துரை என்னைக் கூப்பிட்டனுப்பி யிருந்தார். சென்று, அவரைக் கண்டேன்.