பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மையில், தமிழ் நாட்டு ஆசிரியர்களுக்காக என் கையில் அளித்ததாகவே நான் உணர்கிறேன்.

உலகப் புகழ்பெற்ற டாக்டர் ஆ. இலட்சுமணசுவாமி முதலியாரை அடுத்து, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியை நான் ஏற்க நேர்ந்தது. அந்நிலையில் அப் பல்கலைக் கழகப் பணியாளர்கள், எழுத்தர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர்கள் பேரவையினர், கல்வி மன்றத்தினர், ஆட்சிக் குழுவினர் ஆகிய அனைவருமே எனக்குத் துணை நின்றார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைந்த கல்லூரிகளின், நிர்வாகிகளும், முதல்வர்களும், பேராசிரியர்களும், மாணாக்கர்களும் கொடுத்த ஒத்துழைப் பெரிது. அவர்கள் அனைவருக்கும் நன்றியுடையேன்.

'முன்னர் எந்த ஆறு ஆண்டுகளிலும் சாதிக்காத அளவு சாதனைகளை நெ.து.சு. துணைவேந்தராக இருந்தபோது, சாதிக்க முடிந்தது' என்று அறிந்தோர் பாராட்டும் வகையில் என்னால் வினையாற்ற முடிந்ததற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் காரணங்கள் ஆகும்.

சில இயக்கங்கள், பல பிரிவினர், என்னை வளர்த்துப் பயன்படும் தொண்டனாக்கியதோடு, சில பெரியவர்கள் எனக்குப் பெருந்துணையாக விளங்கினார்கள்.

முதலமைச்சர் மூதறிஞர் இராசாசி அவர்கள். நான் துணை இயக்குநராக இருந்தபோதே என்னை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டி, 'சுறுசுறுப்பும் சமாளிக்கும் திறமையும் நேர்மையும் உடையவர்' என்று மதிப்பிட்டார். அவ்வுதவி, ஞாலத்தின் பெரிதல்லவா? அந் நன்றியை மறக்க இயலாது.

முதலமைச்சர் காமராசர் அவர்கள்,' தெ.து.சு. இராசாசியின் நன்மதிப்பைப் பெற்றவராயிற்றே', என்று ஐயுறாமல், என்னை ஏழை பங்காளர்களில் ஒருவனாகக் கண்டுகொண்டார். என்னைப் பொதுக் கல்வி இயக்குநராக்கி, முழு உரிமை கொடுத்து ஊக்குவித்து, பெருமைக்குரியவனாக்கிவிட்டார். அவருக்கு நன்றி கூறச் சொர்க்களே இல்லை.

பல முக்கியமான நேரங்களில், தாமே முன்வந்து உதவிய பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நிறைய நன்றியுடையேன்.

இந்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் சாக்ளாவின் பரிவான அழைப்பு, என்னை இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தில் இணைக் கல்வி ஆலோசகராகப் பணிபுரிய வைத்தது. அப் பெரியவருக்கும் கடப்பாடு உடையேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/11&oldid=1204950" இலிருந்து மீள்விக்கப்பட்டது