பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நினைவு அலைகள் எப்போது பார்த்தாலும் கூனிக்குறுகி, எல்லோர் முன்பும் அஞ்சி, ஒடுங்கி, உயிரோடிருக்கும் பிழைப்பு பரிதாபத்திற்குரியது; வெறுக்கத் தக்கது; ஒதுக்கத்தக்கது. முனைப்பெல்லாம் தன்மானமாகாது. மெய்யானதன்மான உணர்வு, பிறருடைய தன்மான உணர்வை மதிக்கும். எல்லோரையும் ஒர் நிலையாகக் கருதும். பிறப்பில் தன்னிலும் உயர்ந்தோர் என்று எவரையும் ஏற்காது. தன்னிலும் தாழ்ந்தோர் என்று யாரையும் தள்ளாது: ஒதுக்காது. இத்தகைய உணர்வு எல்லோர் சிந்தனையிலும் கலந்துவிட வேண்டும்; வாழ்க்கையின் உயிர்நாடியாகி ஒன்றிவிட வேண்டும். தன்மான உணர்ச்சி, வெறும் முனைப்பாகக் குத்தக்கூடாது. செருக்கு முள்ளாகத் தைக்கக் கூடாது. செருக்கு பொல்லாதது; சொல்லாமல் அழிப்பது; கொல்லாமல் கொல்வது. செருக்கு யாருக்கும் பொருந்தாது. நஞ்சனைய செருக்கு பலவிதம். ஆளுக்கு ஆள் காட்டிக் கொள்ளும் செருக்கை அறிவோம். கல்வியால் கொப்பளிக்கும் செருக்கு ஒரு நோய்; பொருட் செல்வத்தால் எழும் செருக்கும் ஒரு நோய்; செல்வாக்கால் பீறிடும் செருக்கும் அத்தகையதே. ஆளுக்கு ஆள் செருக்கைக் காட்டுதல், பல சமுதாயங்களில் தலைகாட்டும் பயங்கர நோய். சமுதாயத்திலுள்ள பற்பல பிரிவுகளுக்கிடையே இடிக்கும் செருக்கும் உலகப் பொதுவுடைமை. சாதிச் செருக்கு நம் சமுதாயத்திற்கே தனி உடைமையாகிவிட்ட தனிவகைச்செருக்கு ஒன்று உண்டு. அது எது? அது சாதிச் செருக்கு. சாதிச் செருக்கு என்று புகுந்தது? எப்படி வளர்ந்தது? தொல் கலைவாணர்களும் அறுதியிட்டுக் கூறமுடியாத அளவு ஆயுளையுடையது, சாதிச் செருக்கு. ஊனில், உயிரில், உணர்வில் கலந்து, வாழையடி வாழையாகத் தொடர்வது, சாதி ஏற்றத்தாழ்வு உணர்வு. நீக்கமற நிறைந்துள்ள இவ்வுணர்வைப் பொறுத்தமட்டில், நான், 'ஞானி'களின் நிலையை எட்டிவிட்டேன்; பள்ளிப் பருவத்திலேயே எட்டிவிட்டேன் என்று எழுதினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/110&oldid=786851" இலிருந்து மீள்விக்கப்பட்டது