பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 81 'அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு, வழக்கத்திற்கு மாறாக நடப்பதா? சொல்லாமல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஒத்திகை பார்ப்பதா? கண்டுபிடித்துவிட்டால் சும்மா விடுவார்களா? இப்படியெல்லாம் மூளையை வருத்திக் கொண்டிருந்தேன். எப்படியோ என்னையறியாமலே தூங்கிவிட்டேன். தீண்டாமை ஒழித்தேன் பொழுது விடிந்ததும் எழுந்தேன். வழக்கம்போல், புழக்கடைப் பக்கம் போகவில்லை. நேரே வீட்டையொட்டியுள்ள தொழுவத்திற்குள் சென்றேன். பசு மாடுகளை அவிழ்த்து விட்டிருப்பதைக் கண்டேன். தொழுவத்தில் இருந்த சாணத்தைத் திரட்டிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். எனக்கு இரண்டொரு வயது மூத்த பையன். பளிச்சென்று யோசனை மின்னிற்று. வீட்டிற்கும் தொழுவத்திற்கும் இடையில் இருந்த வாசற் கதவை மூடினேன். வேலை செய்து கொண்டிருந்த சிறுவனிடம் விரைந்தேன். அவன் அதை உணர்வதற்கு முன் அவனைக் கைகளால் தொட்டேன். தேள் கொட்டியதுபோல் குதித்து ஓடினான் அவன். "ஐயோ சாமி, வாணாம். இது வழக்கம் இல்லை. ஆண்டைக்கோ அம்மாவுக்கோ தெரிந்தால் என்னை இங்கே சேர்க்கமாட்டாங்க. அப்புறம் எப்படிப் பிழைப்பேன்? என் வயிற்றிலே மண்ணைப் போட்டுடாதீங்கசாமி. உங்களைக் கை எடுத்துக் கும்பிடுகிறேன்' என்று நடுக்கத்தோடு மெல்லிய குரலில் வேண்டினான். நான், என் கைகளால் வாயைப் பொத்தி, சாடை கர்ட்டினேன். 'இன்னிக்கு மட்டுமல்ல. மறுபடியும் இப்படிச் செய்வேன். ஆனால் யாரிடமும் பேச்சுமூச்சு விடாதே; கிணற்றிலே கல்லு போட்டதுபோல் இருக்கட்டும்; நான் இருக்கிறேன்; உனக்கு ஒன்றும் கெடுதி வராமல் பார்த்துக் கொள்வேன். 'யாருக்கும் தெரியாமல் உனக்குப் பலகாரம் கொண்டுவந்து கொடுப்பேன். இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று வாயை மூடிக்கொண்டு இரு' என்று கட்டளையிட்டேன். 'திருடனைத் தேள் கொட்டியது போன்ற நிலை; சொன்னால், சின்னய்யாவை மட்டுமா கோபிப்பார்கள். அவரை அடிக்காவிட்டாலும் என்னை அடிப்பார்களே தடிக் கழுதை உனக்கு எங்கே போயிற்று புத்தி என்று என் அப்பா அம்மாவும் உதைப்பார்களே. 'நடந்தது தெரிந்தா, யார் வீட்டில் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/123&oldid=786866" இலிருந்து மீள்விக்கப்பட்டது