பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B4 நினைவு அலைகள் என் பிள்ளைப் பருவ வெள்ளை உள்ளத்திற்குச் சாதி உணர்வு ஏற்கவில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச என் நெஞ்சம் விரும்பவில்லை. மற்றவர்கள்மேல் பழியைப் போட்டுவிட்டு நான் தப்பித்துக் கொள்வதற்கு இசையவில்லை. மரபுக் குகைக்குள் பதுங்கிக் கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் சாதி வேற்றுமையை எதிலும் பாராட்டு வதில்லை என்ற எண்ணம் எழும்பியது. உண்மையாக நடப்பது என் குடியின் இயல்பு. ஆகவே, பாட்டியைப் புண்படுத்தினாலும், கிறுத்தவர்கள் தொட்டதை, முஸ்லிம்கள் தொட்டதை, நாட்டு வழக்கப்படி எங்களுக்குக் கீழ் என்று அவர்களே ஒப்புக் கொள்ளுபவர்கள் கையாலே கொடுப்பதை உண்பது அநேகமாக அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. நண்பர்கள் நிறைந்தவனுக்கு உண்பதற்குப் பஞ்சமா? செல்வத்தில் சிறந்த செல்வம் நட்புச் செல்வம். மெய்யான நட்பு வளர்க்கும்; காக்கும்; உதவும்; உரிமையோடு இடிக்கும். அதனால் குறைகள் குறையும். பிழைகள் சிறுக்கும். எனவே நட்பைப் பெற முயல வேண்டும். தோழமை பல முனைகளில் பலரோடு வாய்த்து விடுமானால் அது அரியபேறே. எனக்கு இளமையில் அப்பேறு நிறைய உண்டு. ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் என்னோடு படித்த நண்பர்கள் இன்றும் நண்பர்களாக இருக்கிறார்கள். என்னளவு உயராவிட்டாலும் அதற்காக என்மீது அழுக்காறு கொள்ளாமல் இருக்கிறார்கள்; தன்னம்பிக்கை இழந்து விலகிப் போகாமலும் உள்ளனர்; தூற்றியும் அறியார். அது மட்டுமா? என்னை எக்காலத்திலும் தங்கள் தனிப்பட்ட நன்மைக்கோ, வேண்டியர்களுக்குச் சலுகைக்கோ பயன்படுத்த முயலாமல், நண்பர்களாகத் தொடர்கிறார்கள். 'ஒன்றும் கருதியன்று, அவர் உளம் சென்று பாய்ந்து சேருதல் என்று மனோன்மணியம் மெய்க்காதலர் நிலையைக் காட்டுகிறது. அது என் அக்காலத் தோழர்களுக்கு முழுமையாகப் பொருந்தும். என் இளமைப் பருவத்தை வளமாக்கி, என்னோடு படித்து, என்னோடு ஆடி, என்னுடன் சேர்ந்து சிலவேளை உண்டு, என்னையும் பலவேளை உண்பித்த நல்ல தோழர்கள், பிறருக்கும் வாய்ப்பார்களாக என்று உளமார விழைவதல்லால் நான் வேறென்ன செய்யவல்லேன். அந்த நல்ல பள்ளித் தோழர்களைப் பார்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/126&oldid=786869" இலிருந்து மீள்விக்கப்பட்டது