பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவு அலைகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு சுப்பாராவுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அற்றுப் போய்விட்டது. மோசசும் பாலும் தொழில்களில் உயர்ந்த ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார்கள். நல்லபடி ஒய்வு பெற்றார்கள். பிந்தியவர் மதுரை, தல்லாகுளம் அமெரிக்கன் மிஷன் உயர்நிலப் பள்ளியின் தலைமையாசிரியராக உயர்ந்து, விளங்கி ஒய்வு பெற்றார். வாசுதேவனும் பார்த்தசாரதியும் பள்ளி இறுதியோடு படிப்பை முடித்துக் கொண்டார்கள். குடும்ப வாணிகத்திற்குச் சென்று விட்டார்கள். அவர்களோடு சில ஆண்டுகள் வரையில் மட்டுமே தொடர்பு நீடித்தது. வகாப்பைப் பற்றிய தகவல் தொடரவில்லை. சத்தார் வாலாஜாபாத்தில் வணிகரானார். செல்வம் சேர்த்தார்; தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். பல்லாண்டுகள் அவ்வூரில் காங்கிரசின் பெரும் புள்ளியாகச் சிறப்புடன் விளங்கினார்; ஊராட்சித் தலைவராக விளங்கியதாகவும் நினைவு. சிலரைப்போல, பொதுத் தொண்டைத் தேன் கூடாக்கிக் கொள்ளாதவர் சத்தார். எனவே செல்வம் மெல்ல மெல்லக் கரைந்தது. கடைசி காலத்தில் பணமுடை என்னும் சித்திரவதைக்கு ஆளானார். இவர் இன்று இல்லை. வாலாஜாபாத்திலிருந்து மற்றோர் இளைஞன் வந்தாரல்லவா? அந்த நண்பரின் பெயரை மறந்துவிட்டதை எண்ணி வெட்கப்படுகிறேன். காஞ்சீபுரத்தில் படிப்பை முடித்தபிறகு அவரோடும் பல்லாண்டு தொடர்பு அற்றுப் போயிருந்தது. பின்னர் கல்வித்துறைத் தொண்டனாக வாலாஜாபாத்தில் அப்பா திரு வா. தி. மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த இந்துமத பாடசாலையையும் வள்ளலார் இல்லத்தையும் காணும் பேறு வாய்த்தது. நாதி அற்றவர்களை ஆண்மையுடையவர்களாக, அறிவு மிக்கவர்களாக, முறை தெரிந்தவர்களாக, நன்மக்களாக உருவாக்கும் அற்புத அமைப்பு மட்டுமா கண்டேன்? கல்விப் பணியைச் சமூகப் பணியாக நடத்தி வந்த நல்லாசிரியர்கள், ஊடே என் இஸ்லாமிய நண்பரையும் கண்டேன். இவர் தையல் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அன்றலர்ந்த தாமரையாக இவர் தோன்றினார். முன்னேறிய நாட்டிலோ, சமுதாயத்திலோ இவர் பிறந்திருந்தால் மேலும் வளர்ந்திருப்பாரே என்று எண்ணி, என்னுள் அழுதேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/130&oldid=786874" இலிருந்து மீள்விக்கப்பட்டது