பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 93 நான் ஆறாவது வகுப்பில் படிக்கும்போது, முருகேசன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்தான். அவன் எலும்பும் தோலுமாக இருந்தான். சிலவேளை அவனுடைய சொக்காயும் பொத்தல்கள் உடையதாக இருக்கும். அந்த ஏழை முருகேசனுக்குத்தான் படிப்பின்மேல் எத்தனை ஆர்வம். * முருகேசன் ஏழை மட்டுமா? படிக்காத குடும்பத்தில் பிறந்தவன். அதோடு பால்மனம் மாறாப் பருவத்தே தந்தையை இழந்த சிறுவன். தாய் அன்றாடம் கூலி வேலை செய்து சிறுவனுக்கு அரை வயிறு சோறு போட்டார். தன் வயிற்றை வாயைக் கட்டி, எப்போதோ, கையிலே கிடைத்த நாலு காசைச்சொப்பிலே சேர்த்து வைத்தார். அதைக் கொண்டு தன் ஒரே மைந்தனுக்குச் சம்பளம் கட்டி வந்தார். அந்தப் பொல்லாத காலத்தில் ஆறாம் வகுப்பிற்கே எல்லோரும் சம்பளம் கட்ட வேண்டும். அப்போது யாருக்கும் இலவசக் கல்வி இல்லை. தான் உண்ணா நோன்பிருந்து பையனையும் அரைப் பட்டினி போட்டு, என் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார். ஒடிந்து விடுவதுபோல் சுப்பலாயிருந்த பையனும் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தான். படிப்பதற்காக நாள்தோறும் நத்தப்பேட்டையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவான். நடந்தே திரும்புவான். வேறு வழி? முருகேசன் கையில் காசு இல்லை. வழியில் வண்டிகள் ஒடா, அக்கால ஏழை மாணவர்களுக்கு நடையே வழி. அடிமை இந்தியாவில், கல்வி வாய்ப்பே குறைவு; அதுவும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே எட்டும். அதற்குப் பணம் கண்டுபிடிக்கும் ஏழைகள் பட்டினியாக நலிவதைவிட வேறு மாற்றுக் கிடையாது. மெலிந்த முருகேசன் நெடுந்தொலைவு நடந்து வந்த மெய் வருத்தம் பாராமல் பசி நோக்காது கல்வியின்பால் கருத்தாக இருந்தான். நல்ல மதிப்பெண்கள் பெற்றான். நானும் அவனும் ஒன்றாகச் சேர்ந்து கணக்குப் போட்டுப் பழகுவோம். - ஒருநாள், இடைவேளை தொடங்கும் நேரம், என் தந்தை பள்ளியண்டை வந்தார். முருகேசன் என் கூட்டாளி என்பதை உணர்ந்தார். அவனோடு பேச்சுக் கொடுத்தார். அவன் மதிநுட்பம் விளங்கிற்று. அவனுக்குப் பகல் உணவு இல்லை என்பதும் தெரிந்தது. நெடுந்துாரம் நடந்து, பட்டினியாகப் படித்தும் நிறைய மதிப்பெண் பெறும் முருகேசன்மேல் என் தந்தைக்கு பற்று ஏற்பட்டது. அவனுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார். முருகேசனுக்கு என்று ஒர் தொகையைக் குறிப்பிட்டு, அதனை என் வழியாகக் கொடுத்து வந்தார். மகிழ்ச்சியோடு அவனும் படித்து வந்தான். எனக்கும் நிறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/135&oldid=786880" இலிருந்து மீள்விக்கப்பட்டது