பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நினைவு அலைகள் உலாவுதல் தென்றலின் இயற்கை; ஒளி கொடுத்தல் ஞாயிற்றின் கடமை. குளிர்வித்தல் தண்ணிரின் பொறுப்பு. உதவுதல் மனிதனின் கடமை. தென்றலோ, ஞாயிறோ, நீரோ தான் கடமை புரிந்ததைப் பறைசாற்றுவதில்லை; சாற்றினால் இழிவு. மனிதனும் மற்றோர் மனிதனுக்கு உதவி செய்ய நேர்ந்து விட்டால் அதைச் சொல்லிக் காட்டுவது கீழ்மை. அதை உணர்ந்திருந்தும் இப்போது யான் என் செய்கிறேன்? நாட்டின் நலிவையும் ஏழைகளின் அல்லலையும் இன்றைய தலைமுறைக்குச் சுட்டிக்காட்டவும், பிச்சைபோட்டுத் தீர்வதல்ல சமுதாய வறுமை; தலைகீழான, துணிச்சலான மாற்றத்தால் மட்டுமே, எல்லோரும் வாழமுடியும் என்பதைக் காட்டவுமே, செய்ததைச் சொல்லிக் காட்டும் தாழ்நிலைக்கு என்னை ஆட்படுத்திக் கொள்ளுகிறேன். பொங்கல் விடுமுறை வந்தது; அதற்குப்பின் பள்ளிக்கூடம் திறந்தபோது முருகேசன் வரவில்லை. நாளை வருவான், நாளை வருவான்' என்று எதிர்பார்த்து ஏங்கினேன். ஏன் வரவில்லையென்று தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. நத்தப்பேட்டைக்கு அக்கம்பக்கத்திலிருந்து எவராகிலும் வந்தால் அல்லவா கேட்டறிய முடியும்? முருகேசனைக் காணாது பலநாள் ஏங்கினேன். பேரிடி வீழ்ந்தது; 'இனி வரவே மாட்டான் என்று செய்தி எட்டிற்று. இரக்கமற்ற மக்கள் சமுதாயத்தை விட்டே மறைந்துவிட்டான் என்பது செய்தி. பொய்யாக இருக்காதா என்று நான் ஏங்கினேன். முருகேசனுக்கு உடம்பெல்லாம் சிரங்கு கண்டதாம். காய்ச்சலும் வளர்ந்ததாம். அவன் ஏழைத்தாய் மருந்திற்கு எங்கே போவார்? இரக்கமுடைய யாரோ மந்திரித்தார். ஆனால் பலன் இல்லை மறைந்துவிட்டான். இளமையில் கணவனை இழந்து, ஒரே குழந்தையை நம்பி, அவனுக்காகவே வாழ்ந்த முருகேசனின் தாய் அவன் பிரிவால் என்ன பாடுபட்டிருப்பார்? எப்படித் தவித்திருப்பார்? எண்ணவும் கூடவில்லை. நொந்துபோன, ஆகாயக் கோட்டையிலேயே மூழ்கியுள்ள நம் சமுதாயத்தில், இத்தகைய தாய்களின் வேதனைகளுக்கு மருந்து ஏது? ஏழ்மையே! நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை எத்தனை பச்சைக் குழந்தைகளை விழுங்கி ஏப்பம் விடுகிறாய் எத்தனை எத்தனை. பால் மணம் மாறாச் சிறுவர் சிறுமியர் உனக்குப் பலியாகி வருகின்றனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/136&oldid=786881" இலிருந்து மீள்விக்கப்பட்டது