பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 97 சாதி சமயச் சழக்கை விட்டேன்' என்று அருளிய வள்ளலாரைத் தாக்க, பழமை தலையெடுத்தது; ஆறுமுக நாவலர் என்ற உருவில் வழக்காடிற்று. 'இராமலிங்கர் பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா என்று எழுதி எழுதிப் புழுதி வாரியிறைத்து மகிழ்ந்தது. சிந்தனையைத் துண்டுவதை விட நிந்தனையை வளர்ப்பதில் வெற்றிகண்டது. வெகுளியும் பகைமையும் எல்லாருக்குமே பொல்லாதன. தமிழன் வெகுளியோ பகையோ கொண்டு விட்டால், அவன் செய்யும் அநீதிக்கு அளவு ஏது? கைiசி நடக்கவும் நடுங்கிய அடக்கத்தின் திருஉருவை, "வாடிய பயி ரைக் கண்டபோதெல்லாம் வாடிய இரக்கமே உயிராகிய அடிகளாரை, வழக்கு மன்றத்திற்கு இழுத்துப் பழிக்க முயன்றது கொடிய பழமை. நடுநிலைமையில் இருந்து, உண்மை காண்பதைவிட, குழுச் சண்டைகளிலேயே அதிக மகிழ்வு காணும் மக்களும் தூற்றல் புழுதியால், வள்ளலாரின் ஒளியைச் சில காலம் மறைப்பதில், வெற்றி கண்டார்கள். அணுகுண்டு வெடித்தால், நெடும்பரப்பில் வாழும், கணக்கில் அடங்கா உயிர்களை நொடியில் அழிக்கும். அதோடு நிற்குமா? நில்லாது? அதனுடைய கதிரியக்கம் பரவி, எங்கோ, கருவில் இருக்கும், சிசுக்களையெல்லாம் பாதிக்குமாம். வள்ளலாரின் சமத்துவப் பாக்கள் ஒரு வகையில் அணுகுண்டிற்கு ஒப்பாக வேலை செய்துள்ளன. 'அருட்பா - மருட்பா போராட்டமும் வழக்கும் நாட்டார் காதுகளில் பட்டன. மரபு வழி வாழ்த்துகளையும் புதுவழி - சன்மார்க்க வழிப் பாடல்களையும் பொதுமக்கள் கேட்டார்கள். முந்தியவற்றை ஊரறியப் பாடினர். பிந்தியவை வெளியில் தெரியாமல் செயல்பட்டன. நெடுங்காலமாக ஏற்றுக் கொண்டிருந்த சாதி முறை, அதிலுள்ள உயர்வு தாழ்வு பற்றிச் சாதாரண குடிமக்கள் சிந்திக்கத் தொடங் கினார்கள். மறு பரிசீலனை செய்தார்கள். முன்னே வந்து மாற்றத்திற்குக் குரல்கொடுக்க முடியாத பலரிடம் தங்கள் மனத்தில், சாதியும் சமயமும் தவிர்த்தல் தவறு அல்ல' என்னும் எண்ணம் கருக்கொண்டது. அத்தகைய எண்ணம் கருக்கொண்ட ஒரு பெரியவர், எங்கள் ஊர் ஆற்றின் எதிர்க்கரையில் இருக்கும் இளையனார் வேலூரில் வாழ்ந்தார். எனக்குப் புத்தி தெரிவதற்கு முன்னரே சமாதியடைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/139&oldid=786884" இலிருந்து மீள்விக்கப்பட்டது