பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நினைவு அலைகள் ஆதிதிராவிடர் நுழைவு, சடங்காக மாறவில்லை. தேவைப் படும்போது மற்றவர்கள்போல் வீட்டுக்குள் வரும் அளவில் செயல்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு என் தந்தை, வாலாஜாபாத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இரட்டை மாட்டு வண்டி கட்டப்பட்டது. அதற்கு முன்பு, குடியானவர் யாராவது வண்டியை ஒட்டி வருவதே வழக்கம். இம்முறை வண்டி ஓட்டத் தெரிந்த ஆதிதிராவிடர் ஒருவரிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 'குருக்கள் வீட்டண்டை வந்ததும் நான் இறங்கி, ஆற்றோரமுள்ள நடைபாதையில் புகுந்து, வன்னியத் தெருவின் தொடக்கத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கிறேன். 'குருக்கள் வீட்டண்டை மட்டும் வண்டியை நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள். நம் எருதுகள் சாதுவானவை. பழக்கப்பட்டவை: சமாளிக்கனும் என்பதே இல்லை' என்று ஆதிதிராவிட வண்டிக்காரர் சொன்னார். என் தந்தை இதை ஒப்புக் கொள்ளவில்லை. வண்டிக்காரர் தமக்குள்ளே என்ன நினைத்தாரோ பாவமென்று கருதியிருந்தாலும் வியப்பில்லை. எனினும் தலைமுறை தலைமுறையாக ஆண்டை"யின் சொல்லுக்கு அடங்கி நடந்துவந்த இரத்தத்தில் வந்தவர் அல்லவா? எனவே எங்கள் மாட்டு வண்டியைக் குருக்கள் தெருவே, அவர் ஒட்டிக்கொண்டு போனார். இது ஒருநாள் கூத்தல்ல. பல நாள் தொடர்ந்தது. வண்டியோட்டி வண்டியில் உட்கார்ந்தே ஒட்டிச் செல்வார். இதைப்பற்றி முணுமுணுப்பு முளைத்தது. ஊரில் இரண்டு பேர் கூடினால், இந்த அக்கிரமத்தைப் பற்றிப் பேசாமல் போகமாட்டார்கள். வீட்டுக்கு வீடு, வயலுக்கு வயல், களத்துமேட்டுக்குக் களத்துமேடு, இதைக் கண்டித்துப் பேசி ஆறுதல் அடைந்தார்கள். வேறு வகையாக அது ஏன் பொங்கி வெடிக்கவில்லை! ஒழுக்கமே உருவான தந்தை 'சான்றோர்உடைத்துத் தொண்டை நாடு' என்பது ஆன்றோர் வாக்கு. எங்கள் ஊர்க்காரர்கள் - எல்லாச் சாதியினரும் - அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்கியதும்தான் முதற் காரணம். ஊராருக்கு என் தந்தையிடம் இருந்த மதிப்பும் மகத்தான நல்லெண்ணமும் மற்றோர் காரணம். மதிநுட்பம், சுறுசுறுப்பு, நியாய உணர்வு, உதவும் மனப்போக்கு, ஒழுக்கம் ஆகியவற்றிற்காக அக்கம் பக்கத்து ஊராரும் என் தந்தையைப் பெரிதும் போற்றி மதித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/156&oldid=786920" இலிருந்து மீள்விக்கப்பட்டது