பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நினைவு அலைகள் எங்கோ நெடுந்தொலைவில் கடல் அலை எழுகிறது; வீசி மோதுகிறது. அம்மோதல் மற்றோர் அலையை எழுப்புகிறது. அதன் வாழ்வும் குறுகியதே. அதுவும் மோதி மடிகிறது, மெய்யான வீரனைப் போல. இப்படியே அலைச்சங்கிலி நீள்கிறது. கடைசி வளையம் கரையில் மோதுகிறது. அம்மோதல் அடியோடு வீண் என்று சொல்ல முடியாது. பலபோது, கடல் அரிப்பாக மாறுவதைக் காண்கிறோம். இந்தியர்களுக்கும் அரசுப் பதவிகள் வேண்டும் என்னும் அலை முதலில் எழுந்தது. சட்டமன்றங்களில் இடம் கேட்டு அலைகள் வீசின. சில அலைகளுக்குப் பிறகு இந்தியர்க்கும் ஆட்சியில் பொறுப்பு வேண்டும் என்னும் அலை எழுந்தது. இந்தியர்களுக்குச் சட்டமன்றத்திலும் ஆட்சி அவையிலும் இடம் கேட்கப்போய், இந்தியர்களுக்குள் வெவ்வேறு பிரிவினருக்கும் தனித்தனிப் பங்கு தேவை என்னும் அலைகள் எழுந்தன. இஸ்லாமியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் தனித் தொகுதிகளும் உரிய பங்கும் கோரும் பேரலைகள் பொங்கி எழுந்து மோதின. எந்த அலையும் வீண்போகவில்லை. அவை அடிமைத்தனத்தை எடுத்த எடுப்பில் அடியோடு விழுங்காவிடினும் மாகாணச் சட்டமன்றத்திற்கும், இந்தியச் சட்டமன்றத்திற்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை வந்தது. குறித்த அளவு வரி செலுத்து வோருக்குத்தான் வாக்குரிமை கொடுத்தனர். நாலு சாதி மக்களையும் அண்டவேண்டிய நிலை இதனால் உருவாயிற்று. இந்திய உரிமை அலையே மற்றவர்கள் உரிமை அலையையும் பெற்றெடுத்தது. பின்னர் மாகாண ஆட்சியில் இரட்டை ஆட்சிமுறை என்பது உருவாயிற்று. அது என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள் சிலர் மாகாணங்களில் அமைச்சர்கள் ஆவார்கள். இவர்களிடம் உள்ளாட்சித்துறை, ஆவணப் பதிவு, கூட்டுறவு த்துறை, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மக்கள் உடல்நலம், மருத்துவம், சாலைகள், கல்வி போன்றவை ஒப்படைக்கப்படும். இவர்கள்போக, ஆங்கிலேய ஆளுநர், சில நிர்வாக அவை உறுப்பினர்களை நியமிப்பார். பிந்தியவர்களே, நிதி, சட்டம் ஒழுங்கு, காவல்துறை போன்றவைகளுக்குப் பொறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/158&oldid=786924" இலிருந்து மீள்விக்கப்பட்டது