பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 119 பொறுப்புகள் அப்போதைக்கப்போது மாறும். எனக்கு மூன்று பொறுப்புகளும் அடிக்கடி கிடைத்தன. அப்போது, பொங்கல் சமைக்கக் கற்றுக்கொண்டேன். இத்திறமை பிற்காலத்தில் சாரண இயக்கத்தில் சமையல் தேர்வில் வெற்றிபெற எனக்கு உதவிற்று. காஞ்சியில் பேருந்து தலை காட்டிற்று இன்றைய காஞ்சிபுரத்தில், பகல் முழுவதும் இரவில் சிலமணி நேரம் வரை பேருந்து வண்டிகள், சரக்குப் பேருந்துகள், கார்கள் ஆகியவற்றின் அலறல் காதுகளைத் துளைக்கின்றன. என் மாணவப் பருவக் காஞ்சியில், இந்தத் தொல்லைகள் இல்லை. அன்று இருந்த வண்டி வசதிகள் எவை? நான் காஞ்சிக்கு முதன் முதலாகச் சென்றபோது, நகரத்தில், மூவரிடமே கார் வண்டிகள் இருந்தன. என் பள்ளிக்கூடத் தாளாளர் - ரெவெரெண்ட் மெக்ளின், கிறுத்துவ மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் ஹார்டி, தனியார் துறை மருத்துவர் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் ஆகிய மூவரே, கார் வைத்திருந்தார்கள். அவை, பெருமைக்காக அல்ல. தங்கள் தொழிலை விரைந்து செய்ய அவர்களுக்குக் கார் தேவைப்பட்டது. அப்போதைய கார்கள், இப்போது உள்ள கார்கள்போல, தாழ்ந்திருக்கவில்லை. உயர்ந்த வர்களுக்காகச் செய்யப்பட்ட அக்கார்களும் உயரமாகவே அமைக்கப்பட்டிருந்தன. தரைக்கும் காரின் அடிப்பாகத்திற்கும் மத்தியில் உள்ள இடைவெளி தாராளமாக இருந்தது. கார்கள்அருமையாக இருந்த அன்று, தெருவில் கார்சத்தம் கேட்டால் போதும், பலரும் - பெரியவர்களும் வீட்டுக்குள்ளிருந்து ஒடி வருவார்கள்; வியப்போடு வேடிக்கை பார்ப்பார்கள். அவற்றின் பின்னால் ஒடிப் பார்ப்பதில் சிறுவர்களுக்குத் தனிக் குதுகலம்; தெருப் புழுதி அவர்கள் தலையில்தான்; அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். நான் கீழ் வகுப்புகளில் படித்தபோது பேருந்து வண்டிகள் உண்டா? இல்லை. அன்று காஞ்சிபுரத்திலிருந்து எந்த ஊருக்கும் பேருந்துகள் ஒடவில்லை. நான் மேல் வகுப்புகளில் படிக்கும்போது, மெதுவாகப் பேருந்து தலைகாட்டிற்று. சென்னைக்குப் பேருந்து போகத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/161&oldid=786932" இலிருந்து மீள்விக்கப்பட்டது