பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 121 புதுக் காரின் விலையே மூவாயிரம் ரூபாய்தான் பவுன் பதினைந்து ரூபாய் விற்ற காலம் அது. அவ்வளவு பணத்தைக் கார் வாங்குவதில் முடக்கவே செல்வர்கள் அஞ்சிய காலம் அது. நெஞ்சு பொறுக்குதில்லையே காஞ்சிபுரத்தில் ராஜ வீதிகள் கருங்கல் சரளையால் ஆனவை. தெருக்களின் மூலைகளில் தண்ணிர்க் குழாய்கள் இருக்கும். தெருவின் இருமருங்கும் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும். அதிலும் நெல்லுக்காரத் தெரு, ஓங்கி வளர்ந்த வேப்ப மரங்களுக்குப் பெயர் போனது. பருவ காலத்தில் வேப்பம் பழம் பொறுக்குவதில் பலத்த போட்டியைக் காணலாம். தெருக்களில் சாணி பொறுக்குவதிலும் பெரும்போட்டி அடிக்கடி வாய்ச் சண்டைகளைக் காணலாம். அப்போது கொப்பளிக்கும் சொற்களைக் காது கொடுத்துக் கேட்க முடியாது. பள்ளிக்கூடம் போகும் வயதுடைய சிறுவர் சிறுமிகளும் தெருக்களில் சாணி பொறுக்குவதில் ஈடுபட்டிருந்த கொடுமை என்னை மிகவும் வாட்டிற்று. படித்து முன்னுக்கு வரவேண்டியவர்கள், சாணி பொறுக்கி வீணாகிறார்களே என்று எண்ணி அடிக்கடி ஏங்குவேன். அடிதடிகளை மக்களுக்குள் கண்டதில்லை. அந்தோ அவை தெரு நாய்களின்மேல் வீழ்ந்ததைக் கண்டு மனம் பதறியுள்ளேன். நகராட்சியினர், நாய்களை ஒழிப்பதற்கு அந்தக் காலத்தில் கையாண்ட முறை மிகக் கொடுமையானது; காட்டுமிராண்டித் தனமானது. ஆண்டுக்கு இருமுறை நாய் வேட்டை நடக்கும். சில துணிந்த கட்டைகளை (மனிதர்களை), நாயடிப் போர்களாகக் கூலிக்கு அமர்த்துவார்கள். அவர்கள் பெரிய தடிகளைத் தங்கள் பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு, தெருக்களில் நடமாடுவார்கள். நாயைக் கண்டதும், தடியால் ஓங்கி, மண்டையில் அடிப்பார்கள். முதல் அடியில் நாய் விழாவிட்டால், துரத்தி இரண்டாம் அடியும் கொடுப்பார்கள். கத்திக்கொண்டே, குருதி கொட்டக் கொட்டத் தரையில் விழும். அந்நாயின் பின் கால்களைப் பிடித்து இழுத்துத் தெருவோரத்தில் போட்டுவிட்டு, அடுத்த நாயைத் தேடிக் கொல்லப்போவார்கள். குப்பை வண்டிகள் வரும். அரை உயிரோடு ஊசலாடிக் கொண்டிருக்கும் நாய்களையும் செத்தவற்றையும் அந்த வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு போவார்கள். =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/163&oldid=786934" இலிருந்து மீள்விக்கப்பட்டது