பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நினைவு அலைகள் 'நமது நாட்டில் உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசு'வின் கருத்தும் அதுவேயென நான் அறிந்துகொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும். இப் பத்திரிகையில் பூரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு' என்று முழங்கினார். இந்த முழக்கம், அப்பெரியவரிடம் பற்று வைத்திருந்த பல்லாயிரக்கணக்கானவர்களிடங்கூடப் போதிய ஆற்றல் மிக்க சாதியொழிப்பு உணர்ச்சியை வளர்க்கவில்லையே என்று நான் பல முறை ஏங்கியது உண்டு. தலைப்புப் பாடலாக அமைந்த குடியரசு"வின் சமத்துவக் கொள்கை என்னுள், எளிதாக நுழைந்து இரண்டறக் கலந்து விட்டது. அன்று முதல் இன்றுவரை, அதிற்கண்ட கருத்துகளே என்னை இயக்கி வருகின்றன. அப்பாடல் என்னை ஆட்கொண்டிரா விட்டால், ஞானியார் சுவாமிகள் சுட்டிக் காட்டிய சாதி ஆணவத்தின் உருவமாக நான் வளர்ந்திருப்பேன்; எப்போதும் துருவாசராக வெகுண்டிருப்பேன். பார்ப்பனர் அல்லாத சங்கங்கள் காஞ்சி மாநாட்டில் எழுந்த கருத்து மோதல், பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக முளைத்த நீதிக் கட்சிக்கு நல்ல பயனளிக்கும் எருவாக ஆயிற்று. பல நகரங்களில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்கள் தோன்றின. காஞ்சியிலும் ஒரு கிளை முளைத்தது. என் பள்ளியில் படித்த, எனக்கு மூத்தவர்களில் சிலர் அதை மிகுந்த உற்சாகத்துடன் உருவாக்கினார்கள். திருவாளர்கள் இ. கனகசபாபதி, பா. துரைசுவாமி, தக்கோலம் செல்லப்பா, திருமங்கலம் அய்யவார் நாயுடு, என் மாமா நெ.கோ. சுந்தரசேகரன் ஆகியோர் அம்முயற்சியில் முன்னணியில் நின்றவர்களில் சிலராவர். பின்னர், முந்திய இருவரும் வேலைக்குப் போய்விட்டார்கள். முந்தியவர் திருத்தணி உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக ஒய்வு பெற்றார். அடுத்தவர் வடாற்காடு மாவட்ட ஆணைக்குழுவின் செயலாளராகப் பல்லாண்டு பணி புரிந்து ஒய்வு பெற்றார். திரு.துரைசுவாமி, இந்திய அரசின் எரிபொருள் அமைச்சராக இருந்த மாண்புமிகு பா. இராமச்சந்திரனுக்கு அண்ணார். |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/174&oldid=786960" இலிருந்து மீள்விக்கப்பட்டது