பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து-சுந்தரவடிவேலு 133 – மற்ற மூவரும் சொந்த நிலபுலன்களைக் கவனித்துக்கொண்டு ஆட்டுப் பணத்தைச் செலவிட்டுக்கொண்டு, பொதுவாழ்வில் ஈடுபட்டிருந் தார்கள். இம்மூவரில் தக்கோலம் செல்லப்பா என்பவர் நீதிக்கட்சியும் சுயமரியாதை மேடைகளும் விரும்பி அழைத்த பேச்சாளர்களில் ஒருவராக வளர்ந்தார். கடைசி இருவரும் செங்கற்பட்டு மாவட்டத்தில், வட்ட ஆணைக்குழு, மாவட்ட ஆணைக்குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர் களாகித் தீவிரமாகப் பொதுத் தொண்டு புரிந்தார்கள். இருவருமே ஊரை அடித்துத் தம் உலையில் போட்டுக் கொள்ளாதவர்கள். தங்கள் சாதிக்காரர்களுக்கே பரிந்துரை என்னும் இக்கால நோய்க்கு ஆளாகாத பொதுத் தொண்டர்களாக விளங்கினார்கள். என்னைப் போன்றவர்களுக்கு இது வியப்பானதல்ல. ஏன? முப்பெரும் தலைவர்கள் அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைமையின் சிறந்த மரபு அத்தகையது. நீதிக்கட்சியின் தாயும் தந்தையுமாக விளங்கியவர்கள் பிட்டி. தியாகராயச் செட்டியாரும் டாக்டர் டி.எம். நாயரும், அத்தையாக விளங்கியவர் டாக்டர் நடேச முதலியார். முந்தியவருடைய தாய்மொழி தெலுங்கு. பிந்தியவருடைய தாய் மொழி மலையாளம், டாக்டர் நடேச முதலியாரின் தாய் மொழி தமிழ். மூவருமே அறிஞர்கள்; தனி வாழ்க்கையில் பெருமைக்குரியவர்கள்: நாதியற்ற மக்களுக்கு உழைக்க வந்ததால், செல்லாக் காசும் கைம்மாறு பெறாதவர்கள். டாக்டர் நடேசர் ஏழைகளின் மருத்துவர். முதல் இருவரும், தங்கள் சொந்தப் பிழைப்பைப் பெரிதாகக் கருதியிருந்தால், இந்தியாவின் பெரிய புள்ளிகளில் இருவராக வளர்ந்திருப்பார்கள். தத்தம் மதிப்பையே உணராத தமிழ் மக்கள், தங்கள் தலைவர்களின் மதிப்பைப் போதிய அளவு அன்றும் உணரவில்லை; இன்றும் உணரவில்லை; நாளையும் உணர்வார்களா என்பது பெரிய கேள்விக் குறி. அது கிடக்கட்டும். தியாகராயர், அந்தக் காலக் கோடீசுவரர்; பட்டதாரி; பெரும் வணிகர்; மாபெரும் வள்ளல். தொடக்கத்தில் தியாகராயரும் டாக்டர் நாயரும் பொது வாழ்க்கையில் நண்பர்கள் அல்லர் மாறாக ஒருவருக்கு ஒருவர் கடுமையாகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/175&oldid=786962" இலிருந்து மீள்விக்கப்பட்டது