பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 141 நிலத்திலே நாற்றை ஊன்றுவதுபோல், கல்வி நிலையங்கள் அறிவு நாற்றுகளை, ஆற்றல் கன்றுகளை, சீல விதைகளை மாணவர்களிடம் விதைப்பதை மட்டுமே செய்யமுடியும். நாற்றையோ, கன்றையோ, விதையையோ நெருக்கமாக நட்டாலும், ஊன்றினாலும், தூவினாலும் நன்மைக்குப் பதில் தீமையே விளையும். எனவே கல்வி நிலையங்கள், எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதோ, திணிப்பதோ, நல்லதல்ல. அக்காலத்தில் நெருக்கத் திணிப்பு இல்லை. அக்காலத்தில் பெற்றோர் சங்கத்தைப் பார்ப்பது அரிது. ஆனால் கல்வி நிலையங்கள் பெற்றோர் ஒத்துழைப்பை, ஆதரவைப் பெறுவது சாதாரணம். . கல்வி நிலையங்களின் நன்முயற்சிகளுக்குத் தோள் கொடுக்க வேண்டியவை, குடும்பமும் சமுதாயமும். அக்காலத்தில் பல குடும்பங்கள், கல்வியை நாடவில்லை; பிள்ளைகளைப் படிக்க வைக்கவில்லை; தொடக்கப் பள்ளிக்கும் அனுப்பவில்லை. ஆயினும், பிள்ளைகளைப் படிக்க வைத்த குடும்பங்களோ, ஆசிரியர்களை மதித்தன; மதிக்கக் கற்றுக் கொடுத்தன; ஆசிரியர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்தன; மாணவர்களின் கவனத்தைக் கல்வியின்பால் திருப்பிவிட்டன. கல்வியைப் பொருட்டாக மதித்த பெற்றோர்களிடம் அக்காலத்தில் அக்கறை அதிகம்; அலட்சியம் அருமை. இக்காலத்தில் படிக்க வைப்பது நாகரிகமாகிவிட்டது; நல்ல போக்கே. ஆனால், அக்கறை குறைந்து, அலட்சியம் வளர்ந்து வருகிறது. பொதுமக்களுக்குச் செல்வம் தேட, ஊர்ப் பெரியதனத்தைப் பார்க்க நேரம் இருக்கிறது. பிள்ளைகளை வளர்க்க நேரம் இல்லை. பாடத் திட்டத்தில் இது வேண்டாம்; அது வேண்டாம் என்பதைப் பற்றிப் பொதுக் கிளர்ச்சிகள் இல்லாக் காலம் நான் படித்த காலம். எனவே, கல்வி முயற்சியில் எல்லோரும் ஈடுபடாமல், சிலரே ஈடுபட்டாலும் அன்று கல்விக்கு உதவியான சூழ்நிலை அதிகம் இருந்தது. என் மாணவப் பருவ சமுதாயத்தில், கவனச்சிதைவுக்கு வாய்ப்புகள் குறைவு. கோயில் திருவிழாக்கள் மட்டுமே படிப்பிலிருந்த நாட்டத்தை வேறு பக்கம் திருப்பும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/183&oldid=786973" இலிருந்து மீள்விக்கப்பட்டது