பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவு அலைகள் வகுப்பறையிலும் சோதனைக் கூடங்களிலும் பெறமுடியாத கல்விக் கூறுகளைக் கல்விச் சுற்றுலா கொடுக்கிறது. அது கூட்டுணர்ச்சி வளரத் துணை; பொறுப்புணர்ச்சி வளரத் துணை குழுவை முழுமையாகக் கவனித்து அழைத்துப் போய், திரும்ப அழைத்துவரும் பயிற்சிக்கு ஒத்திகையாகும். எதற்கு? பிற்காலத்தில் தன்தலைமையில், இயக்கத்தில் செயல்படும் பலரையும் ஒருமையாகப் பார்த்து, காத்து, எவருக்கும் தீங்கு வராமல் அரவணைத்து எவரும் விடுபட்டுப் போகாதபடி பார்த்து முன்னேறும் நடவடிக்கைக்கு ஒத்திகை. என்னுடைய பட்டறிவு, பெற்றோர்க்கு எதைச் சொல்லத் துடிக்கிறது? வாய்ப்புகளை வழங்குங்கள். தாராளமாக வழங்குங்கள்: உங்கள் பொருள் நிலை இடம் கொடுக்கும் அளவு ஏராளமாக வாய்ப்புகளை வழங்குங்கள். உங்கள் குழந்தைகள் நீங்கள் நினைப்பதைவிட அதிக அறிவுடையவர்கள்; ஆற்றல் உடையவர்கள்; குணக்குன்றுகள்: நல்லுனர்வாளர்கள். எத்தனையோ சிறப்புகள் அவர்களிடம் கருவுற்றிருக்கின்றன. உரிய காலத்தில் இயற்கையாக வெளிவரும். எனவே வாய்ப்புகளைத் தாருங்கள். சூழ்நிலை செம்மையாக இருக்கட்டும். உங்கள் பையன்களையும் பெண்களையும் பூச்சி பூச்சி என்று பூட்டி வைத்துக் கொள்ளாதீர்கள். குழந்தைப் பருவத்திலேதான் பூட்டி வைக்கிறீர்கள். அவர்கள் வளர்ந்து, உங்களைப் போன்று பொறுப்பேற்கும் நிலைக்கு வரும்போது, பல வேளை உங்களைவிட அதிக, பெரிய, சிக்கலான, பொறுப்புகளை ஏற்கப்போகும்போது, நீங்களா அடிக்கடி உதவப் போகிறீர்கள்? அவர்களே, தங்கள் ஊக்கத்தால், சுறுசுறுப்பால், விழிப்பால், புன்முறுவலால், சிலவேளை சுட்டெரிக்கும் பார்வையால், கூட்டிச் செயல்பட வைக்கும் திறமையால், பெரும் பெரும் பொறுப்புகளைச் சமாளிக்க நேரிடலாம்; நம்முடைய நெடிய வாழ்க்கையில் தேள்களும் தென்படும்: பாம்புகளும் காட்சியளிக்கும்; காட்டுப் பன்றிகளும் வழிமறித்து ஒடும்; இத்தனையையும் சமாளித்தே ஆகவேண்டும். ஒரத்தே படுத்துறங்கும் தேளையும் பாம்பையும் அப்படியே விட்டு விட்டுச் செல்வதே அறிவுடைமையாகும் நேரங்களும் உண்டு; கொன்று விட்டே அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டிய நெருக்கடிகளும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/188&oldid=786978" இலிருந்து மீள்விக்கப்பட்டது