பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவு அலைகள் வாழ்ந்தவர். நகரமன்றத்தில் பல்லாண்டுகள் உறுப்பினர்; ஒரு முறை அதன் துணைத் தலைவராகவும் இருந்தவர். கோடை விடுமுறையின்போது, என்னை வேலூருக்கு அனுப்பி வைக்கும்படி, என் அப்பாவிடம் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். அடுத்தடுத்து இரு கோடை விடுமுறைகளின்போது, வேலூர் சென்றேன். ஒவ்வோர் முறையும் இரண்டு மூன்று வாரங்கள் அவர் வீட்டில் தங்கியிருந்தேன். மிகச் செல்லமாகக் கவனித்துக் கொண்டார். அவர் மனைவி, திருமதி. பாக்கியம்மாள் என்னைத் தன் பிள்ளைகளில் ஒருவராகவே கருதினார். பரிவையும் பாசத்தையும் காட்டினார். பிற்காலத்தில், கசந்துகொள்ளக் காரணம் ஏற்பட்டபோதும் கசந்துகொள்ளவில்லை. பழைய பாசத்தோடும் பரிவோடும் வாழ்நாள் முழுவதும் என்னை அன்புடன் நடத்தினார். - 'யார்மேலும் தவறில்லை. எதுஎது எப்படி நடக்கவேண்டுமோ அப்படித்தான் நடக்கும்' என்று தன்னையும் பிறரையும் தேற்றினார்; குறையாத அன்போடு இருந்தார். முதலியார் மண்டிக்கடைக்குக், காலை, மாலை இரு வேளையும் செல் வார். என்னையும் ஒரு நாள் அழைத்துக்கொண்டு போய்க் காட்டினார். மண்டி நெரிசலும் நடமாட்டமும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனவே எப்போதோ ஒரு முறை, மரியாதைக்காக அவர் மண்டியண்டை, மாலையில் தலை காட்டுவேன். துரைசாமி முதலியாரின் அண்ணார் மகன்கள் நால்வர். அவர்களில் மூத்த இருவராகிய சுப்பிரமணிய முதலியாரும், சண்முக முதலியாரும் தம் சிறிய தந்தையாரோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் காலமெலாம் என்னிடம் அன்பு கொண்டிருந்தார்கள். 'உன்னோடு ஐவரானோம் என்பதுபோல இருந்தார்கள். அத்தனை வாஞ்சை. அவ்விருவரின் தம்பிகளாகிய திரு. சம்பந்தமூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியவர்களோடு நான் பெரும் பொழுதைக் கழிப்பேன். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு அளவேது? அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்க் கோட்டையைக் காட்டினார்கள். வேலூர்க் கோட்டை வெளிதான் எங்களுடைய மாலை நேரத்தைப் போக்கும் இடமாயிருந்தது. பல நாள், அக்கோட்டையைச் சுற்றி நடந்திருக்கிறோம். அது நல்ல உடற்பயிற்சியாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/190&oldid=786981" இலிருந்து மீள்விக்கப்பட்டது