பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நினைவு அலைகள் பார்த்து, மோட்சத்திற்கு நுழைவுச்சீட்டுப் பெற்றுவிட்டே, மறுவேலை பார்ப்பது என்று முடிவு செய்தார்கள். அவர்களோடு அவர்கள் பிள்ளைகளும் பெண்களும் சேர்ந்து புறப்பட்டார்கள். அடுத்த நாள் காலை சென்னைக்கு இரயில் ஏறவேண்டும். முன் நாள் இரவு ஏழு மணிக்கு, என் பாட்டிக்குச் செய்தி எட்டிற்று. அப்போது அவர் சுமங்கலி: வயதானவர். இருப்பினும் அவருக்கும் மோட்சம் தேவை. அதற்கு எளிதான வழி, உள்ளது உள்ளபடியே தோன்றும் தசாவதாரத்தைக் கண்குளிரக் காண்பது. 'இவ்வரிய வாய்ப்பினை இழக்கக்கூடாது. இப்போது தவறினால் பிறகு யாரும் இட்டுக்கொண்டு போய்க் காட்டமாட்டார்கள் என்று நினைத்தார். ஆகவே, உறவினர்களோடு சென்று பார்க்க விரும்பினார் பாட்டி. அப்பாவைக் கேட்காமல் போகக்கூடாதென்று தடை சொன்னேன். 'உனக்கு அப்பா, எனக்குப் பிள்ளைதானே. புண்ணிய காரியத்திற்குப் போனதற்காக வீட்டைவிட்டு விரட்டிவிடம்ாட்டான். நான் உன் அப்பாவிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். நீ வா. நாலு நாள் பாடத்தை, வந்த பிறகு சேர்த்துப் படித்துக் கொள்ளலாம். 'நீ வராவிட்டால், சோறு போட இங்கே உறவினர் யாரும் இல்லை. எந்த ஒட்டலும் இல்லை. பயப்படாமல் வா' என்று ஆணையிட்டார். அதுவரை, பாட்டியா? அப்பாவா? யார் பேச்சைக் கேட்பது என்ற போட்டி, எடை எனக்கு ஏற்பட்டதில்லை. வேறு வழியின்றிப் பாட்டியின் ஆணையை ஒப்புக் கொண்டேன். அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிக் கொண்டு, இரயில் ஏறிச் சென்னைக்குச் சென்றோம். இரண்டு ஒற்றை மாட்டு வண்டிகளில் எழும்பூரில் இருந்து, சிந்தாதிரிப்பேட்டை சாமிநாய்க்கன் தெருவுக்குச் சென்றோம். என் அத்தையின் கணவர் திரு. நாராயணசாமி முதலியார். 'பிரேசர் அன்ட் ராஸ்' என்னும் கணக்கு பார்க்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவர் வீட்டில் தங்கினோம். நாடகத்திற்கு நுழைவுச் சீட்டு வாங்கவும் உயிர்க்காலேஜ்', 'செத்த காலேஜ்', 'மீன் காலேஜ் பழைய கலங்கரை விளக்கு ஆகியவற்றைக் காணவும் ஏற்பாடு செய்து உதவி செய்தார். தசாவதாரத்தைப் பார்த்தோம். அத்தகைய கவர்ச்சியான நாடகத்தை நாங்கள் அதற்கு முன் பார்த்ததில்லை. அத்தனை சோடனை அத்தனை பளபளப்பு பொருத்தமான நடிப்பு உருக்கமான அவையோர். ஆகா! என் உறவினர்களும் அவையோரும் எத்தனை தரம் அவதாரங்களைக் கண்டு, கன்னங்களில் போட்டுக் கொண்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/194&oldid=786985" இலிருந்து மீள்விக்கப்பட்டது