பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நினைவு அலைகள் மாற்றாள்கண்டு பிடிக்கச் சென்னைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இடையில் மூன்று நான்கு நாள்கள் பயிர் வாடிப்போயிற்று. எதையும் தாங்கும் இதயங்கொண்ட மனிதனல்லவே பயிர். முன்னர் இடையறாது ஈரம் இருந்த வயல்கள், மோட்டார் தடைப்பட்டுக் காய்ந்து காய்ந்து ஈரம் பெற்றன. ஆதாயம் குறைந்தது: ஆள் கண்டு பிடிக்கும் தொல்லையும் வளர்ந்தது. ஆகவே, பழையபடி கவலை இறைப்புக்கு மாறும் நெருக்கடி ஏற்பட்டது. நம்முடைய பயிர்த்தொழில் நவீனமாக வேண்டும்; உரிய ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துகொள்ள வேண்டும்; பொறிகளை இயக்கவும் பழுது பார்க்கவும் உள்ளூரில் இல்லாவிட்டால் அக்கம்பக்கத்து ஊர் ஆள்களையாவது பயிற்றுவித்துக் கொள்ளா விட்டால், குறிக்கோள் நிறைவேறாது. இதை அன்றைய அனுபவம் தெளிவுபடுத்தி இருக்கிறது. தன் கையே தனக்கு உதவி சில ஆண்டுகளுக்குப் பின், ஊரில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் சிலர் வளர்ந்து வந்தபின் மீண்டும் எண்ணெய் மோட்டார் இறவை வந்தது; அது நிலைத்தது, பின்னர் மின்பொறி இறவையாகத் தொடர்கிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில், உழுவதற்கு மாடுகளும் ஆள்களும் போதிய அளவு கிடைக்கவில்லை. நேரத்தில் எல்லா வயல்களையும் உழுது பயிரிட முடியவில்லை. பெரும் பகுதி நிலம் என்னுடைய உறவினர்களிடம் இருந்தது. அவர்கள் கூடிப் பேசினார்கள். டிராக்டர் ஒன்று வாங்கி உழ எண்ணினார்கள். இரண்டு மூன்று பேர்கள் புறப்பட்டுச் சென்னைக்கு வந்தார்கள். டிராக்டர்களைப் பார்த்து, விலை பராமரிப்புச் செலவு முதலியவற்றைத் தெரிந்து கொண்டார்கள். முதலில் எண்ணியதை உறுதிப்படுத்திக் கொண்டு என்னிடம் வந்தார்கள். ஊரில் என்னுடைய குடும்ப நிலம் தந்தை இறந்த பின்னும் பாகப்பிரிவினையின்றிக் கூட்டாகப் பயிரிடப்படுகிறது. எனக்கு நேர் இளையதம்பி சிவானந்தம் அதைப் பார்த்துக் கொள்ளுகிறார்; அவரும் உடன் வந்தார். ஊர்ப் பொதுவில் ஒர் டிராக்டர் வாங்கிப் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாகச் சொல்லி அதன் விலையில் எங்கள் பங்குக்கு உரிய பணத்தைப் போடும்படியும் கேட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/200&oldid=786992" இலிருந்து மீள்விக்கப்பட்டது