பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நினைவு அலைகள் கம்பெனியில் உதவி கோரினார்கள். வாக்குறுதி கிடைத்தது. பழுது பார்க்கும் ஆள் வருவதற்குள், பருவம் ஓடிவிட்டது. பழையபடி மாட்டைக் கட்டிக் கொஞ்சம் உழுது பயிரிட்டுக் கொண்டார்கள். பழுது பார்க்க வந்த நிபுணர் டிராக்டரைச் சென்னைக்கு அனுப்பினால்தான் செப்பனிட்டுத்தர இயலும் என்று கையை விரித்துவிட்டார். முதல்முறை மோட்டார் இறைவைபோல் ஆகிவிட்டது டிராக்டர் உழவு. பழைய டிராக்டராக விற்கப்பட்டது. இழப்பு சில ஆயிரம். குறை எங்கே? புதிய முறைக்குத் தேவையானவர்களை உள்ளூரிலேயே உருவாக்கிக் கொள்ளாமை, குறை. நாடு, பலவகையில் தொழில் மயமாகி வருகிறது. விஞ்ஞானம், வீடுதோறும் குடிசைதோறும் வந்துவிட்டது. அதை இயக்க, செப்பனிட, எங்கோ உள்ளவர்களை நம்பியிருத்தல் தேவைக்கு உதவாது; உடனடியாக உதவாது என்பதை நாடு இன்றும் போதிய அளவு உணரவில்லை. தொழிற் பள்ளிகளில், சென்ற நூற்றாண்டையே நினைத்துக் கொண்டு, எதையோ சொல்லிக் கொடுக்கிறோம். இன்றைய தேவைகளுக்குப் பயிற்சி கொடுப்பதில்லை. பயிற்சி பெறுவோரும் வாழையடி வாழையாக, யாரிடமோ கைகட்டிப் பிழைத்தவர்கள்; தாமே முயன்று பாடுபட்டு முன்னுக்கு வரும் போக்கு அவர்கள் குருதியில் இல்லை. எனவே ஒருபால், பல பக்கம், பலவகைப் பொறிகள் நாள்கணக்கில் பழுதுபார்க்கப் படாததால், வேலை கெடுகிறது. மற்றோர்.பால் அவ்வேலைகளைக் கற்றுக் கொள்ளாமையால், தொழில் பயிற்சி பெற்றவர்களும் மனுப்போட மட்டுமே கற்றவர்களாகத் தேங்குகின்றார்கள். நாட்டுப்புற வேலைகளைச் செய்து வளம் பெருக்குகிறவர்களாக மாறியிருந்தால் அவர்களும் வாழ்ந்திருப்பார்கள், நாடும் வாழ்ந்திருக்கும். ஊருக்குச் சொல்ல நான் யார்? மேல் படிப்புக்கு எதிர்ப்பு என் படிப்பிற்குச் செல்வோம். பள்ளியிறுதிப் படிப்பை முடித்தபின் என்ன செய்ய?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/202&oldid=786994" இலிருந்து மீள்விக்கப்பட்டது