பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெ. து. சுந்தரவடிவேலு

161


இக்கேள்வி எழுவது இயற்கை. என்னைக் கல்லூரிக்கு அனுப்பி மேலும் படிக்க வைக்க வேண்டுமென்பது என் தந்தையின் விருப்பம்.

திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பிற்குமேல் போகாத அவருக்கு இந்த எண்ணம் எப்படி எழுந்தது?

பார்ப்பனரல்லாதவர்களும் பட்டம் பெற்று, பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்று, நீதிக்கட்சி கோடுகாட்டிற்று. அது எங்கள் தந்தைக்கு எட்டிற்று. அது மட்டுமா?

ஒரு காலத்தில் எங்கள் பக்கத்துக் காவல்துறை ஆய்வராகத் திரு. துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் என்பவர் பணிபுரிந்தார்.

அவர், கோவை மாவட்டத் துடியலூரைச் சேர்ந்தவர். நல்ல தமிழ்ப் புலமை பெற்றவர்: சைவ சமயத் தொண்டர்.

காவல்துறையில் பணிபுரியினும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் இனிமைக்கும் ஒழுங்கிற்கும் பெயர் பெற்றவர். என் தந்தைக்கு நண்பரானார்.

அவர் என் அப்பாவிற்கு அன்பளிப்பாகத் தந்த 'துடிசைப் புராணம்' அவருடைய அலமாரியில் நெடுநாளிருந்தது.

துடிசைக்கிழார் என்தந்தையின் நெஞ்சில், இக்காலக் கல்வியின்பால் பற்றுதலை ஏற்றிவிட்டார்.

பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் அதைத் தூண்டிக் கொண்டே இருந்தார்.

இளையனார் வேலூரில் தூரத்து உறவினர் - ஒருவர் - திரு. சடகோபன் - பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். வேலூர் துரைசாமி முதலியார் அண்னன் மக்கள் இருவரும் கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்.

அதோடு என் தந்தைக்கு வேண்டியவர் ஒருவர் வாலாஜாபாத்தில் இருந்தார். அவர் பெயர் திரு. கன்னிவேலு செட்டியார். அவரை அடிக்கடிக் காண்பது உண்டு. அவர் செல்வர்; அவருடைய தம்பியாகிய திரு. எம். டி. இராஜு, ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்திருந்தார். அதுவும் தூண்டுதலாக அமைந்தது.

அத்தனை தூண்டுதல்களும் என் உயர்கல்விக்கு ஆதரவாக நின்றன. ஒரே ஒரு எதிர்ப்பு.

என் அப்பாவின் அப்பா, நான் மேல் படிப்பிற்குப் போவதை விரும்பவில்லை. அவர் பழைய தலைமுறையல்லவா?

மேலும் இளையனார் வேலூரில் ஒருவர் எட்டாவது முடித்து விட்டு வெளியூரில் அஞ்சல்துறையில் சேர்ந்தார். அவர் சம்பள உயர்வு புெற்று அப்போது மாதம் நூற்று ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார்.