பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 163 உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க இருந்த எங்கள் அனைவரையும் புகைப்படம் பிடிக்க ஏற்பாடு செய்தார்கள். தலைமை ஆசிரியர் ஞானாதிக்கமும் பிற ஆசிரியர்களான திருவாளர்கள் பொன்னையா, சங்கர அய்யர், பாக்கியநாதன், பிரகாசம், நரசிம்மாச்சாரியார் ஆகியோரும் உடன் அமர்ந்தனர். அப்போதுதான், நான் முதன்முதலாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். 'இந்தியன் கிராப் பை மறைக்க, ஒரு துண்டால் தலைப்பாகை கட்டிக்கொண்டதாக நினைவு. அக்கால கட்டத்தில் நம் பொதுமக்களிடையே ஒரு மூடநம்பிக்கை ஊடுருவி இருந்தது. அது என்ன? புகைப்படம் எடுத்துக் கொள்வோருக்கு ஆயுள் குறையும் என்பது பரவலான கருத்து. அக்கருத்து இன்று மலைவாழ் காட்டுமக்களிடம் ஒருகால் இருக்கலாம்! அடிக்கடி புகைப்படத்தில் வீழ்வது, சாவினை விரைந்து நாடுவதென்று, இக்கால நாட்டு மக்கள் நினைப்பதில்லை. காலத்தின் மாற்றம் - நல்மாற்றம் - அப்பொய்யைத் துடைத்து விட்டது. என்னை ஆளாக்கிய காஞ்சிபுரம் யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளி, சென்னைக் கிறுத்துவக் கல்லூரியின் நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வந்தது. யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளி கிறுத்துவக் கல்லூரியின் கிளையாகவே கருதப்பட்டது. எனவே, கல்வியாண்டின் முடிவில் உயர்நிலைப்பள்ளி அலுவலகமே கிறுத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான மனுக்களை வரவழைத்து, பள்ளியிறுதி மாணவர்களுக்கு வழங்கியது. நானும் ஒரு மனுவைப் பெற்றேன்; நிறைவு செய்தேன். உரிய கட்டணத்தோடு, பள்ளியின் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்தேன். அந்த அலுவலகமே மனுக்களைத் திரட்டிக் கல்லூரிக்கு அனுப்பிற்று. சில வாரங்களுக்குப் பின் தேர்வின் முடிவுகள் வெளியாயின. மதிப்பெண்களைக் காட்டும் சான்று இதழ்கள் - இல்லை நூல்கள் - வந்து சேர்ந்தன. அக்காலத்தில், பள்ளியிறுதித் தேர்வின் முடிவுகள் செய்தித் தாள்களில் வெளியானதாக நினைவில்லை. மாணவர்களாகிய நாங்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று முடிவுகளையும் மதிப்பெண் ஏடுகளையும் பெற்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/205&oldid=786997" இலிருந்து மீள்விக்கப்பட்டது