பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 GB நினைவு அலைகள் இவர், அப்போது டி.டி.வி. உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்து வந்தார். தமிழ்ப் புலமையோடு, பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெற்றிருந்தார். நீதிக்கட்சியின் தொடக்க காலந்தொட்டு, அதை வளர்க்கத் தொண்டு ஆற்றிய உத்தமர். அக்கட்சியின் கொள்கையைப் பரப்பும் பொருட்டு, கைம்மாறு கருதாது, பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில நாள் இதழின் ஆசிரியராக விளங்கிய ஆ. இராமசுவாமி முதலியாரோடு அடிக்கடி பயணஞ் செய்து அவருடைய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்தவர். 1938 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில், தம் அருமை வாழ்க்கைத் துணைவியாராகிய உண்ணாமுலை அம்மையார் பங்குகொண்டு, சிறைக்குச் செல்வதற்கு உடன்பட்ட தியாகி. ஒல்லும் வகை யெல்லாம் பார்ப்பனரல்லாதாருக்கு உதவி செய்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்டவர். தமிழ்க்கடல் கா. நமச்சிவாய முதலியாருக்கு மிகவும் வேண்டியவர். அவரைப் போன்றே ஆங்கில நூல்களையும் தொடர்ந்து படித்து வந்தார். அக்காலத் தமிழ்ப் பண்டிதர் உலகில் முற்போக்கு, சீர்திருத்தக் கருத்துகளுக்காகக் குரல் கொடுத்த சிலரில் ஒருவராகிய எஸ்.எஸ். அருணகிரி நாதர், விருந்தோம்பலில் சிறந்தவர். நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்; சுறுசுறுப்பே உருவானவர். சிறுவர்க்கான எண்ணற்ற நூல்களை, புதினங்களை எழுதி, தமிழ்த் தொண்டாற்றியவர். பிற்காலத்தில், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவும் திரு டி. செங்கல்வராயனும் பெத்துநாயக்கன் பேட்டைத் தொகுதியில் மாநகராட்சிக்குப் போட்டியிட்டகாலை, அண்ணாவின் குரலாக, பற்பல மேடைகளில் முழங்கினார். அறிஞர் அண்ணாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானார். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று வாழ்ந்த ஆசிரியமணி, பண்டிதர் எஸ். எஸ். அருணகிரிநாதர் பல்லாண்டு காலம் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சிறப்பாக உதவி வந்தவர். ஆயினும் பார்ப்பனரிடம் பகைமை பாராட்டாதவர். எவருக்கும் உதவி செய்வதையன்றி, ஊறுவிளைவிப்பதை அறியாத அறவோர். தமது பொதுத் தொண்டிற்கு ஈடாக, தமக்கோ தம் இரு பிள்ளைகளுக்கோ, குடும்பத்திற்கோ, எவ்வுதவியும் பெற்றவர் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/210&oldid=787003" இலிருந்து மீள்விக்கப்பட்டது