பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 169 அத்தகைய, பிறர்க்கென முயலுநர் செறிந்திருந்தால், உட்சாதி உணர்வற்ற பார்ப்பனரல்லாதார் முன்னணியில் இருந்ததால், நாட்டுப்புற மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பின்தங்கிய மக்களும் முன்னர் முனைந்து தழைத்து ஓங்க முடிந்தது. பலருக்கும் நிழல் தந்த, திரு அருணகிரிநாதர், எங்கள் மூவருக்கும் சிற்றுண்டி அளித்தார். பிறகு, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் நடந்துவந்த கிறுத்துவக் கல்லூரியை நோக்கி எங்களை அழைத்துக் கொண்டு போனார். கிறுத்துவக் கல்லூரியா? மாநிலக் கல்லூரியா? முதலில் "கெய்த்னஸ் ஹாலுக்குச் சென்றோம். அவ்விடுதியில் அல்லவா எனக்கு இடம் ஒதுக்கியிருந்தார்கள்? கெய்த்னஸ் ஹால் கல்லூரிக்கு அருகில் இருந்தது. இது வசதியாகத் தோன்றிற்று. அது மூன்று மாடிக் கட்டடம். எவ்வளவு உயர்ந்த கட்டடத்தில் வாழப்போகிறோம்? மகிழ்ச்சியுணர்வோடு உள்ளே நுழைந்தோம். மகிழ்ச்சி மங்கிவிட்டது. ஏன்? பட்டப்பகல் வெட்ட வெளிச்சத்தில் தரைமட்டத்தில் இருட்டு. மின் விளக்கொளியும் போதவில்லை. புதிதாகச் சேர்வோர்க்குத் தரைமட்ட அறைகளோ, முதல் மாடி அறைகளோ கிடைக்கும் என்று கேள்விப்பட்டோம். முதல் மாடிக்குச் சென்று பார்த்தோம். ஏதோ குகைக்குள் சிக்கிக் கொண்ட உணர்ச்சி எங்கள் நால்வரையும் தாக்கிற்று. ஜூன் திங்களிலேயே பகலில் இவ்வளவு இருட்டாக இருக்கிறதே! மழைக்காலத்தில் எப்படியிருக்குமோ! காஞ்சியில் நான்கு குடித்தனத்தில் ஒன்றாகக் குடியிருந்தாலும் வெளிச்சத்திற்கும் காற்றுக்கும் பஞ்சமில்லை. இந்தக் கிடங்கில் எப்படி வாழ்வது? அதுவரை இருட்டின்றி வாழ்ந்துவிட்ட எனக்குச் சோகம் பொங்கிற்று. பெரியவர்கள் மூவரும் என் நிலையைப் புரிந்துகொண்டார்கள். நான் 'கெய்த்னஸ் ஹாலி'ல் தாக்குப் பிடிக்க மாட்டேன் என்பதை உணர்ந்தார்கள். கலந்து ஆலோசித்தார்கள். விக்டோரியா விடுதியில் இருந்து பதில் இல்லை. மாநிலக் கல்லூரியில் சேருவதற்கு இடங்கிடைக்குமா என்றும் தெரியவில்லை. "கிறுத்துவக் கல்லூரிக்குப் போவதை ஒத்திவைப்போம்: திருவல்லிக்கேணிக்குப் போய் மாநிலக் கல்லூரியில் இ-சி கிடைக்குமா என்று விசாரிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/211&oldid=787004" இலிருந்து மீள்விக்கப்பட்டது