பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவு அலைகள் அவர் சொல்லில் உறுதி ஒலித்தது; உண்மையில் இனிமை மின்னிற்று. திரு. அருணகிரிநாதர் அவரிடம் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் அறிமுகப்படுத்தினார். என்னைத்தட்டிக் கொடுத்த கேதாரி ராவ் 'பால் வடியும் முகம்' என்று பரிவுடன் பாராட்டினார். அருணிகிரிநாதர் பக்கம் திரும்பி, 'கள்ளம் கபடம் அறியாத மக்கள்' என்று என் அப்பாவையும் மாமாவையும் மதிப்பிட்டார். நன்னம்பிக்கையோடும் பாராட்டோடும் மாநிலக் கல்லூரியை விட்டு வந்தோம். இன்னும் இடம் கிடைக்கவில்லையே என்ற கவலையை மறந்து பேருந்து நிலையத்திற்கு நடந்தோம். 20. கல்லூரி வாழ்க்கைக்கு ஏற்பாடுகள் திருவல்லிக்கேணி, பைகிராப்ட்ஸ் சாலையும் வேங்கடரங்கம் பிள்ளைத் தெருவும் கூடும் இடம் பேருந்து நிலையமாக இருந்தது. நாங்கள் அதை நெருங்கியபோது, அங்கே பேருந்து இல்லை. உயர்ந்து வளர்ந்திருந்த ஆலமரங்களின் நிழலில் காத்திருந்தோம். எப்போதோ, எவரோ வைத்தது எங்களுக்குப் பயன்பட்டது. எத்தனை எத்தனை ஆண்டுகளாகவோ எண்ணற்றவர்களுக்கு நிழல் கொடுக்கிறது; மனிதனும் அப்படியிருந்தால்? தொடக்கப் பள்ளியும் இல்லாத பட்டிக்காடு; சாலையில்லாப் பட்டிக்காடு; எழுத்தறியாத, ஆனால் பண்பு நிறைந்த தாய்; அவருடைய திண்ணைப் பள்ளிக்குமேல் செல்லாவிட்டாலும் தானே முயன்று, உலகியல் அறிவு பெற்ற சான்றாண்மையும் வினைத் திட்பமும் உடைய தந்தை; அவருடைய நீண்ட தொலைநோக்கு. படாடோபமான எழுத்தறிவித்தல்: எனக்கு எட்டிய உயர்நிலைப்பள்ளிப் படிப்பு: பைபிளைக் கற்றுப் பண்பட்ட நிலை; சாதி அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெறியப் பெற்ற வாய்ப்புகள். என் கல்வி முன்னேற்றத்திற்குத் துணைநின்ற ஆசிரியர்கள்; பெற்ற பரிசுகள்; பள்ளி இறுதித் தேர்வில் நான் பள்ளியின் இரண்டாம் இடத்தைப் பெற்றது; இத்தனையும் நிழற்படம்போல் சிந்தையில் ஒடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/214&oldid=787007" இலிருந்து மீள்விக்கப்பட்டது