பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 183 செய்யுளைச் சொற்களாகப் பிரித்துப் பார்ப்பதில் அதிக நாட்டம் இல்லை; இலக்கணப் பாடங்களாகவும் அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை. பேராசிரியர் எஸ்.ஈ. அரங்கநாதன் செய்யுள் நடத்திய முறை எங்களுக்குப் பிடித்திருந்தது; புதுமையாக இருந்தது. ரசிகமணி டி.கே.சி. பல மாதங்களுக்குப் பின்னர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் எங்கள் கல்லூரிக்கு வந்து பேசினார். அவர் பேராசிரியர் அரங்கநாதனின் பாணியைப் பின்பற்றியதைக் கண்டேன். கம்பராமாயணத்தில் நான்கு பாட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாடி, பாட்டைச் சுவைக்கும் வகையைக் காட்டினார். அவற்றை மீண்டும் மீண்டும் பாடிச் சொக்க வைத்தார். 'எந்தக் கவிஞன் பேரிலாகிலும் காழ்ப்பு இருந்தால், அவனுடைய செய்யுள்களில் சிலவற்றைப் பாடமாக வைத்து விடுங்கள். தேர்வுக்கான பகுதியாகவும் போட்டுவிடுங்கள்; அப்புறம் யாரும் அப்பாடல்களைத் தொடமாட்டார்கள் என்று திரு டி.கே.சி. அடிக்கடி சொல்லுவார். பேராசிரியர் அரங்காதன் செய்யுள் கற்பித்ததைக் கேட்டிருந்தால், இப்படிக் குற்றஞ் சாட்டியிரார். பெளதிக வகுப்பு ஆங்கில வகுப்பு முடிந்ததும், கல்லூரியின் மாடியில், வடகோடியில் இருந்த பெளதிக வகுப்பிற்குச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரித் தரை வழவழவென்றிருந்தது. புது பூட்ஸ் காலோடு நடந்த எனக்கு எங்கே சறுக்கிவிடுமோ என்ற அச்சம் மிக அதிகமாயிற்று. 'உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தேன். விழாமல் போய்ச் சேர்ந்தேன். திருவாளர் கணபதி சுப்ரமணிய அய்யர் வகுப்பெடுத்தார். குறிப்பிடத்தக்க சிறப்போ, குறையோ இல்லை. - மேசைமேல் சில ஆய்வுக் கருவிகளை வைத்து, சோதனை செய்து காட்டினார். விழிப்பாகப் பார்த்தோம்; விடாமல் எழுதிக் கொண்டோம். அடுத்து? மணி அடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/225&oldid=787019" இலிருந்து மீள்விக்கப்பட்டது