பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நினைவு அலைகள் பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட உதவும் என்று அன்னிய ஆட்சி நினைத்தது. நமச்சிவாயரை அழைத்தது; பாடம் சொல்ல உடன்பட்டார். அவர் பணிபுரிந்தது, நம்பிக்கையை வளர்த்தது. வெற்றியோடும் மதிப்போடும் நல்ல பெயரோடும் தொடர்ந்து பணிபுரிந்தார். பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பதவி காலியாயிற்று. நமச்சிவாயர் அப்பதவிக்கு மாற்றப்பட்டார். அது என்னுடைய நற்பேறாயிற்று. தமிழ்ப் பண்பாட்டோடு வாழ்ந்து காட்டியவர் செல்வத்தின் பயன்ஈதலே. தற்குறிகள் நிறைந்த நம் நாட்டில் இதைப் படித்தவர் சிலரே; உணர்ந்தவர்கள் அவர்களிலும் சிலரே; செயல்படுத்தியவர்கள் மிகச் சிலரே; அதையே வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டவர்கள் மிக மிகச் சிலரே. -- மிகமிகச் சிலரில் ஒருவராக நமச்சிவாயர் விளங்கினார். நமச்சிவாயரின் வாழ்நாளில் அவரளவு பொருள் ஈட்டிய ஆசிரியர் எவரும் இல்லை; அவரளவு பலருக்கும் வாரி வழங்கி வாழவைத்த ஆசிரியரும் யாரும் இல்லை. நமச்சி வாயரின் மூத்த மகன் திரு. தணிகைவேல், கல்லூரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தார். நான் எடுத்த விருப்ப பாடங்களையே எடுத்திருந்தார். எனக்கு நண்பரானார். நெருங்கிய நண்பரானார்; இன்றும் தொலைவிலிருந்து பார்த்து மகிழ்கிற நண்பரானார். தணிகைவேலைப் பார்ப்பதற்காக அடிக்கடி நான், அவருடைய 'கடலகம் என்ற பங்களாவிற்குச் செல்வதுண்டு. எப்போது சென்றாலும் நமச்சிவாயரிடம் உதவிநாடி வந்த பண்டிதரையும் பிறரையும் காண்பதுண்டு. வந்தவர்களுக்கு விருந்தோம்புவதில், கடலகம் சிறந்து விளங்கியது. எந்நேரம் யார் போனாலும் தவசிப்பிள்ளை விரைந்து வந்து, 'காப்பியா, தேனி.ரா, பாலா, மோரா? எது கொண்டு வரட்டும் என்று விசாரித்துக் கொண்ட பிறகே, நமச்சிவாயரிடம் விருந்தினர் வருகையை அறிவிப்பார். நானும் பலமுறை விருந்தோம்பலைத் துய்த்தது உண்டு. நமச்சிவாயர் பாடஞ்சொன்ன முறை எங்களுக்குப் பிடித்திருந்தது; அமைதியாக, பொறுமையாக, தெளிவாகப் பாடம் நடத்துவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/234&oldid=787029" இலிருந்து மீள்விக்கப்பட்டது