பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒரு முறை படிப்பதோடு நின்றுவிடாதே. மூன்று நான்கு முறை படி. படித்தபின், சிந்தித்துப்பார்; ஆழ்ந்து சிந்தித்துப்பார். திரும்பத் திரும்ப படித்த பிறகு, ஆழ்ந்து சிந்தித்துக் கடவுள் இல்லை என்னும் முடிவிற்கு நீ வந்தால், அதன்படியே நடந்துகொள். 'கடவுள் நம்பிக்கையோ, மறுப்போ உன்னுடைய ஆழ்ந்த மதிப்பிற்குரிய உணர்வாக இருக்கவேண்டும். அது மற்றவர்களைப் பார்த்துக் காப்பியடிக்கக் கூடிய ஒன்றல்ல. 'ஆழ்ந்த கல்வியும் சிந்தனையும் உன்னை உண்மையாக நாத்திகனாக்கினால், வெட்கப்படத் தேவையில்லை. 'ஒரே ஒரு எச்சரிக்கை, வாழ்க்கை நெடு வழியில் எப்போதாவது கடவுள் நம்பிக்கை என்னும் ஊன்றுகோல் உனக்குத் தேவைப்பட்டால், அதைத் தேடிக்கொள்ளவும் கூசவேண்டாம்: 'உணர்வும் நம்பிக்கையும் உலகம் மெச்ச அல்ல; உனக்குத் துணையாக. எம் முடிவிற்கு வருவதானாலும் நுனிப்புல் மேய்ச்சலால் விளைய வேண்டாம். 'என்னைப் பொறுத்தமட்டில், கடவுள் நம்பிக்கை என்னும் உணர்வில் ஐம்பது ஆண்டு காலம் வளர்ந்தபிறகே இங்கர்சாலின் நூலைப் படிக்க நேர்ந்தது. 'இங்கர்சாலை வெறுக்க என் அறிவு இடம் கொடுக்கவில்லை; அவரை ஏற்க உணர்வு அஞ்சுகிறது. 'நம்பிக்கை யென்னும் கடைக்காலின்மேல் என் வாழ்க்கை கட்டப்பட்டுவிட்டது. அறிவின் ஆணைப்படி அதைப் பெயர்த்துக் கொண்டால், இதுவரை இருந்த அளவு நல்லவனாக இருப்பேன்ா என்று ஐயப்படுகிறேன். நல்லவனாக இருப்பதே என் வாழ்க்கை லட்சியம். 'என் கடவுள் நம்பிக்கை அதற்குத் தடையாகாதபடி, சமரச உணர்வோடு வாழ்ந்து வருகிறேன். 'அதற்காக நீ கடவுள் நம்பிக்கைக் காரனாக இரு என்று வற்புறுத்த மாட்டேன். இது பெரிய விஷயம். புனிதமான விஷயம்; மென்மையானதும்கூட. இதில் ஒவ்வொருவரும் தாமே முடிவு செய்வதே நல்லது' என்று நீண்ட விளக்கம் தந்தார். வகுப்பிலுள்ளோர் திகைத்துப் போனோம். கேள்வி கேட்ட மாணவர் எஸ். ராமசாமி, யார்? வைணவர்; அதை மறைக்காமல், நெற்றியில் மெல்லிய சிவப்புக் கோட்டோடு கல்லூரிக்கு வந்தவர். தமிழில் ஆர்வம் உள்ளவர்; சுறுசுறுப்பான இளைஞர்: போக்கிரி அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/237&oldid=787033" இலிருந்து மீள்விக்கப்பட்டது