பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஆசிரியர் இலட்சுமிநாராயணன் எனக்கு வேதியியல் கற்பித்தவர் திரு. இலட்சுமிநாராயணன் என்பவர். அவர் இளைஞர்: ஒராண்டிற்கு முன்புதான், பி.எஸ்.சி. (சிறப்பு) பட்டம் பெற்றார். உடனே, வேதியியல் சொற்பொழிவாளராக, அதுவும் மாநிலக் கல்லூரிக்கே நியமிக்கப்பட்டார். அது மிகவும் பொருத்தமான நியமனம். வேதியியல் பற்றி ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த திரு. இலட்சுமி நாராயணன், உழைப்பிலும் ஊன்றியிருந்தார். தாம் வேலைக்குப் புதிது என்பதை மறக்கவில்லை; அதை நினைத்து, அஞ்சவில்லை. பின் என் செய்தார்? வகுப்புக்கு வருமுன் நடத்த வேண்டிய பாடத்தைப்பற்றி முழுமையாக எண்ணித் திட்டமிடுவார். போதிய குறிப்புகளோடு வருவாா. சோதனைகளை எங்கள் முன் நடத்திக் காட்டுவார். கரும்பலகையில் சோதனை அமைப்புப் படங்களைச் செம்மையாக வரைந்து விளக்குவார். வகுப்பில் வால்தனம் தலைகாட்டும். புரியாத குரல் ஏதாவதொரு மூலையில் இருந்து கேட்கும். சிலவேளை, காகித அம்புகள் 'சர்' 'சர்' என்று பாயும். அப்போதெல்லாம் அவர், படம் வரைவதை, சோதனை செய்வதைச் சில நொடிகள் நிறுத்துவார். கண்களாலேயே வகுப்பைச் சுட்டெரிப்பார். ஆனால் வெகுண்டு, சொற்களைக் கொட்ட மாட்டார்; மேலிடத்திற்குப் புகார் செய்ய மாட்டார். பொறுமையால் எங்களை வென்றார். நாங்களாகவே, ஆய்வுக்கூடங்களில் சோதனைகள் நடத்த வேண்டிய வேளை வரும். அப்போது அவர் எங்களை அணைத்து வழிகாட்டுவார். 'குறும்புக்காரர்களையும் அலட்சியப்படுத்த மாட்டார். வகுப்பறையில் சில மாணவர்களிடம் முளைத்த குறும்பு, ஆய்வுக்கூடத்தில் ஆசிரியரின் பாசமழையில் மூழ்கி நசித்தது. வேதியியல் பாடத்திட்டத்தில் கந்தக அமிலம் உற்பத்தி செய்வது சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் பொருத்தமான கருவிகளைக் கொண்டு சோதனை வழியாகச் சிறப்பாகச் செய்து விளக்கிக் காட்டினார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/241&oldid=787038" இலிருந்து மீள்விக்கப்பட்டது