பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நினைவு அலைகள் கந்தக அமிலத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கே எங்களை அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட விரும்பினார். அத்தகைய தொழிற்சாலை இராணிப்பேட்டையில் இருந்தது. பாரி கம்பெனியாரின் நிர்வாகத்தில் இருந்தது. அந்நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டார். பிரயாணத்துக்குத் திட்டமிட்டார். இராணிப்பேட்டை பயணம் ஒரு சனிக்கிழமை, எங்கள் வகுப்பு முழுவதையும் இராணிப் பேட்டைக்கு அழைத்துக்கொண்டு போனார். எங்களுக்காக இரயிலில் தனிப்பெட்டி ஒன்றும் ஏற்பாடு செய்தார். அதிகாலை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டோம். இராணிப்பேட்டையை அடைந்தபோது, பகல் பத்து மணிபோல் இருக்கும். திரு. இலட்சுமிநாராயணனும் அவரோடு வந்த இரு விளக்குநர் களும் எங்களோடு இருந்து தொழிற்சாலையில் பகுதிகளைக் காட்டினார்கள். பெருமளவில் கந்தக அமிலம் உற்பத்தி செய்வதை நேரில் பார்த்தோம். தொழிற்சாலை வளவுக்குள் போர் போராக எலும்புத் துண்டுகளைச் சேர்த்து வைத்திருந்தார்கள். தாவர உணவுக்காரர்களாகிய எனக்கும் மற்றும் சிலருக்கும் அது குமட்டலைக் கொடுத்தது. எதற்காகக் குவித்து வைத்திருக்கிறார்களென்று கேட்டறிந்தோம். வெள்ளைச் சர்க்கரை உற்பத்தியில் ஒரு கட்டத்தில் எலும்புத் துண்டுகளைக் கொண்டு அழுக்குகளை எடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். மாமிசம் வயிற்றுக்குள் திணிக்கப்பட்டது போன்ற ஒரு துயரமான வேதனை எங்களைக் கெளவிற்று. ஏதேதோ பழகிப் போகிறதல்லவா? இதுவும் பின்னர்ப் பழகிப் போய்விட்டது. இப்போது சர்க்கரையைச் சுத்தப்படுத்துவதற்கு எலும்புத் துண்டுகளைக் கொண்டு செய்யும் முறை இல்லை. சர்க்கரையை விஞ்ஞானபூர்வமாகவே சுத்தப்படுத்திவிடுகிறார்கள். இராணிப்பேட்டையிலேயே பகல் உணவை முடித்துவிட்டு, பிற்பகல் இரயில் ஏறி மாலை முடியும் வேளை சென்னைக்குத் திரும்பினோம். திரும்புகையில், பாட்டுகள் பீறிட்டன. சில இனிமையாக இருந்தன. வேறு சில கத்தலாகக் கேட்டன. எதிலும் கொச்சை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/242&oldid=787039" இலிருந்து மீள்விக்கப்பட்டது