பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கல்விச் சிந்தனைகள் முன்னும் பின்னும் மனமெனும் குரங்கு 'மனமெனும் பேய்க்குரங்கு' இது முன்னோர் முடிவு. இது எவ்வளவு உண்மை? குரங்கால் சும்மா இருக்க முடியாது; கிளைக்குக் கிளை தாவும்: மேலும் கீழும் பாயும்; ஒயாத குறும்பு, குரங்கின் இயல்பு: பசிக்கு இரை தேடித் தாவினால் பொருள் உண்டு; விரட்டுவோருக்கு அஞ்சி உச்சாங் கிளைக்குப் பாய்ந்தால் புரியும். பசியும் இல்லை, விரட்டுவோரும் இல்லை: கருத்தைக் கவரும் பெண்குரங்கும் இல்லை; ஆயினும் ஓயாது அலைகிறது குரங்கு. மனமும் அப்படியே அலைகிறது. இங்கே இருக்கும் மனம் எங்கெங்கோ பாய்ந்து சுற்றி அலைந்து வருகிறது. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிச் சோர்வுறுகிறது. உணவை வேளைக்கு வேளை தேடவேண்டிய நெருக்கடியில் உள்ளவர்களின் மனம் அலைவது புரியக்கூடியது. எல்லார்க்கும் எல்லாம் இருப்பதான நிலையைக் கண்டுவிட, கோட்டைகள் கோடி கட்டுவதும் வியப்புக்குரியதல்ல; குறையும் அல்ல. வாழ்நாள் முழுவதும் உண்பதற்கும் உடுத்துவதற்கும் போதியவற்றைப் பெற்றவர்கள் மனமாகிலும் சும்மா இருக்கிறதா? இல்லை. அதுவும் நொடிக்கு நொடி எந்தெந்தக் கோடிக்கோ பறந்து பதறுகிறது. சோலையில் ஒடி விளையாடினால் சரி. சாக்கடையில் வீழ்ந்து வீழ்ந்து தத்தளிக்கிறது. ஒரு சாக்கடையில் வீழ்ந்து தப்பிய பிறகும் தெளிவும் பெறுவதில்லை. மீண்டும் மீண்டும் அதே தவற்றில் தோய்கிறது. கீழ்மை மட்டுமல்ல, மனத்தின் திருவிளையாடல். சிறப்பு, சான்றாண்மை ஆகியவைகூட மனத்தின் அறுவடைகள் இவற்றின் கொடி முடிகளைச் சிலபோது, சிலபேர்களுடைய மனங்கள் எட்டிப் பிடிக்கின்றன. மிக உயர்ந்ததை, எய்திய பிறகாகிலும் அதே உயரத்தில் ஊன்றி நின்றுவிடுகிறதா? இல்லை. பொத்தென்று படுபாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறது. ஆன்றோர்க்கே சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்' கைவராதபோது, இந்தக் கலை எனக்கு மட்டும் எப்படிக் கைவரும்? நானும் மற்றவர்களைப்போல் மனத்தின் திருவிளையாடல்களில் சிக்கிச் சிக்கித் தவிக்கிறேன். நல்ல வேளையாக, அது என்னை எந்தச் சாக்கடையிலும் தள்ளி மூழ்க வைத்துக் களியாட்டம் போடுவதில்லை. சென்ற காலச் சிறப்புகளை எண்ணி ஏங்க வைப்பதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/244&oldid=787041" இலிருந்து மீள்விக்கப்பட்டது