பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 225 மதுரையில் 10-2-1925ஆம் நாள் சில இளைஞர்கள் கூடி வனமலர்ச் சங்கம் என்னும் அதே பெயரில் மற்றொரு சங்கம் அமைத்தார்கள். இரண்டும் இணைந்தால் இயக்கமாகுமே என்னும் எண்ணம் எழுந்தது. தன்னலம் தழைக்காத இளமைப்பருவம் அல்லவா? இரு சங்கத்தவரும் மதுரையிற் கூடினர். இதை முதல் ஆண்டு விழா என்று அழைத்தனர். 25,26-4-1926 நாள்களில் கலந்து பேசி இரண்டையும் கிளைகளாக்க முடிவு செய்தார்கள். எழுவர் அடங்கிய மையச் செயற்குழுவை ஏற்படுத்தினார்கள். 'சர்வாதிகாரம்' என்னும் சொல்லைக் கண்டு அவ்விளைஞர்கள் அஞ்சவில்லை போலும். எழுவர் கொண்ட செயற்குழுவிற்குச் 'சர்வாதிகாரக் கமிட்டி' என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். கோபிச்செட்டிப் பாளையத்தில் 10-6-1927இல் ஒரு கிளையை நிறுவினர். 31-12-1927இல் சென்னையில் கிளைத்தது. 8-1-1928இல் முசிரியில் கிளைவிட்டது. 20-8-1928இல் கொடுமுடி கிளையைக் கொண்டது. சங்கத்தின் நோக்கம் வனமலர்ச் சங்கத்தின் நோக்கம் என்ன? பொது ஜன நன்மைக்கு உழைப்பதே' உழைக்கும் வழிகளையும் திட்டவட்டமாக எழுதியிருந்தார்கள். வழிகள் எவை? பட்டியலைப் பாருங்கள். அ. மக்கள் சமரசம். ஆ. தமிழ் மொழி பேணலும் அதற்கு வழி காணலும். இ. கிராம அபிவிருத்தி. உறுப்பினராகத் தகுதிகள் என்ன? "பதினான்கு வயதிற்கு மேற்பட்டு இருக்க வேண்டும். சங்கத்தின் நோக்கத்தை ஒப்புக் கொள்ளுதல்; சங்க விதிகளுக்குக் கட்டுப்பட உறுதியளித்தல் ஆகிய மூன்றாம். ஆண் பெண் இருபாலரும் உறுப்பினர் ஆகலாம். சந்தா உண்டா? உண்டு. எவ்வளவு? ஆண்டுக்கு நான்கு ரூபாய்கள். அக்கால நான்கு ரூபாய்கள் சிறு தொகையல்ல; ஒரு மூட்டை நெல்லின் விலை. இளவட்டங்கள் இவ்வளவு செலுத்தி வனமலர்ச் சங்கத்தில் சேர்ந்தார்கள். எதை எண்ணி? பதவியையா? பட்டத்தையா? புகழையா? செல்வாக்கையா? இல்லை! இல்லை இல்லவே இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/267&oldid=787070" இலிருந்து மீள்விக்கப்பட்டது