பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 247 அவர் (ராமசாமி) உலகாதுபவம் என்னும் கலாசாலையில் கற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும் கதைகளும் கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நான் அறியேன். 'மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். 'பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும் விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ. பட்டதாரிகளுங்கூட, அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள், அவருடைய வாதத் திறமை அபாரமானது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெரியாரின் பேச்சுப் பாணியை எவரால் பின்பற்ற இயலும்? கல்லூரிப் படிப்பை முடித்த பிறகே, அறிஞர் அண்ணாவின், தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்பொழிவுகளைக் கேட்டு மயங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகே, கர்மவீரர் காமராசரின் பேச்சுகளைக் கேட்கும் பேறு பெற்றேன். என்னுடைய அலுவலுக்குப், பேச்சுக்கலை தேவைப்பட்டது. கேட்டுக் கேட்டுப், பெற்ற பட்டறிவு கைகொடுத்தது. சொன்மாரியைக் காட்டிலும் கருத்துகளை விளக்கும் பாணி, அதிகப் பயனுள்ளது என்று உணர்ந்தேன். காமராசரின் பேச்சில் சொல் நயம் சொட்டாது; கவிதை மனம் கமழாது. எனினும் மக்களை ஈர்க்கும். - எதனால்? ஏற்கவோ, மறுக்கவோ வேண்டிய கருத்து மணிகள் அவர் பேச்சில் கிடைப்பதால். 'எதை நினைத்து எதைச் சொன்னார் என்று குழம்பும்படி காமராசர் பேசியதில்லை. அப்பாணியைப் பின்பற்றுவதற்கு நான் முயன்றேன். அதில், நான் வெற்றி பெற்ற அளவிற்கு, பொதுமக்களைக் கல்வித் தொண்டில் ஈடுபடுத்தும் பேரியக்கங்களை நடத்துவதிலும் நல்ல வெற்றி பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/289&oldid=787100" இலிருந்து மீள்விக்கப்பட்டது