பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. மறக்க முடியாத நாள்கள் விடுதியில் என் அன்றாட வாழ்க்கை காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுவேன். அதிகாலையில் படிக்க வேண்டிய பாடங்களைப் படிப்பேன். வீட்டுக் கணக்குகளைப் போடுவேன். பிறகு வெந்நீரில் குளியல். நாள்தோறும் தலைமூழ்கு வேன். வாரத்திற்கு இரு நாள்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன். காலை எட்டரை மணிக்கே, பகல் உணவு போடுவார்கள். நான் மரக்கறி உணவுக்காரன். மரக்கறி சாப்பாடும் பலமானது. பருப்பு, குழம்பு, சாறு, தயிர், அப்பளம், இருவகை காய்கறிகள் ஆகியவை அன்றாட உணவுப் பட்டியல். அளவுச் சாப்பாடு நாங்கள் அறியாதது; எதுவும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிகம் உண்டாலும் கொஞ்சம் சாப்பிட்டாலும் எல்லாருக்கும் ஒரே கட்டணம். மொத்தச் செலவைச் சமமாகப் பங்கிட்டு வசூலிப்பார்கள். பண்டிகைகளின்போது வடை, பாயசம், இனிப்புகள் புகுந்து விடும். மொத்தத்தில் அவ்வளவு சுவையான பக்குவமாகச் சமைக்கப்பட்ட உணவைப் பிற்காலத்தில் சிலபோதே உண்டேன் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, அன்றைய விக்டோரியா விடுதியில், மாத்வ ராவ்கள் செய்து போட்ட, மரக்கறி குருமா'வைப்போல் பின்னர் சாப்பிட்டதில்லை. நேரில் கறந்து வாங்கி, சிவக்கக் காய்ச்சி, அளவோடு உறைகுத்திய பசுந்தயிரை ஐந்தாண்டு காலம் உண்டோம். அதற்கு இணை அதுவே. அதுவும் வேண்டிய மட்டும் கிடைத்தது. நடுப்பகல் அளவு, கட்டுப்பாடு இல்லாமல் நல்ல சிற்றுண்டியும் காபியும் கொடுப்பார்கள். வாரத்திற்கு இரு நாள்கள் இனிப்பும் கிடைக்கும். இரவு சாப்பாட்டில் பருப்பு இராது. துவையல் உண்டு. இரவில் தயிருக்குப் பதில் மோரைப் பரிமாறுவார்கள். இவ்வளவு நல்ல சாப்பாட்டிற்கு மாதம் எவ்வளவு கொடுத்தோம்? விருந்தினர் செலவு தந்தையார் ஆதரவு விக்டோரியா மாணவர் விடுதியில், இருவேளைச் சாப்பாடு, ஒரு வேளைச் சிற்றுண்டிக்குப் பதினேழு பதினெட்டு ரூபாய்கள் ஆகும். பண்டிகை விருந்து இருப்பின், இரண்டொரு ரூபாய் கூடுதல் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/306&oldid=787140" இலிருந்து மீள்விக்கப்பட்டது